இளம் வயதிலேயே எம்.எல்.ஏவாக தேர்வானவர் செங்கோட்டையன் என்றும், அதிமுகவில் இருபெரும் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் செங்கோட்டையன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புகழாரம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுகவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 77 வயதான KA. செங்கோட்டையன், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், அதிமுகவில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அரசியல் நடவடிக்கையை இன்று எடுக்கவுள்ளார்.
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் நேற்று விஜயை சந்தித்து 2 மணி நேரம் பேசிய நிலையில் இன்று கட்சி தாவல் நடக்கிறது. வளர்ந்து வரும் தவெக கட்சியில் இணையும் முதல் மூத்த தீவிர திராவிடத் தலைவர் இவரே ஆவார். இது தமிழகத்தின் மூத்த திராவிட அரசியல் தலைவர்களுக்கும், புதிய அரசியல் கட்சியான தவெகவிற்கும் இடையிலான ஒரு இணைப்புப் பாலமாகப் பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையன் தனது கட்சி நுழைவை இறுதி செய்ய நேற்று விஜயை அவரது பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். கட்சி வட்டாரங்களின்படி, முக்கிய தலைவர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா கடந்த வார இறுதியில் செங்கோட்டையனை சந்தித்து அவரது இணைப்புக்கான ஆயத்த வேலைகளை முடித்தனர்.

விஜய்யின் நட்சத்திர செல்வாக்கினால் மக்கள் அவரை நோக்கி சென்றாலும், களத்தில் பணிகளை செய்ய, இரண்டு மூன்று தொகுதிகளை ஒரே நேரத்தில் கவனிக்க, மாநிலம் முழுக்க தொண்டர்களை ஒருங்கிணைக்க போதுமான தலைவர்கள் அவரிடம் இல்லை. அதற்கு செங்கோட்டையன் நல்ல தேர்வாக இருப்பார். தற்போது தவெகவின் கள அரசியல் பலம் குறைவாகவே உள்ளது. இந்த சூழலில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது தனிப்பட்ட வாக்கு வங்கியை இன்றும் தக்க வைத்துள்ளார்.
தவெக அவரை அங்கிருந்து போட்டியிடச் செய்தால், உள்ளூர் அரசியல் இயந்திரத்தை விட ரசிகர்களின் உற்சாகத்தால் இயங்கும் கட்சியில், விஜய்க்குப் பிறகு அவரே கட்சியின் இரண்டாவது உறுதியான சட்டமன்றத் தொகுதியைப் பெறுவார். அதாவது விஜய் அவரின் தொகுதியில் வெல்வது உறுதியாகும் பட்சத்தில், செங்கோட்டையன் வெல்வதும் உறுதியாகும். செங்கோட்டையனின் இந்த இணைப்பு தவெக மற்றும் அதிமுக இடையேயான உறவை மேலும் சிக்கலாக்குகிறது.
விஜய் தொடர்ந்து பிஜேபி மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் தாக்கி வந்தாலும், அதிமுகவை நேரடியாக எதிர்கொள்வதைத் தவிர்த்து வந்தார். சி.என். அண்ணாதுரை முதல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல் ஜெயலலிதா வரையிலான அதிமுக தலைவர்களை அவர் அடிக்கடி தனது பேச்சுகளில் குறிப்பிடுவார். செங்கோட்டையனின் இந்த கட்சித் தாவல், தேர்தல் களத்தைப் பாதிக்கும். இதனால் இனி அதிமுக – தவெக கூட்டணி உருவாகாமல் போகும். செங்கோட்டையன் தவெக கட்சியில் இணைந்தால் அவர் எடப்பாடி உடன் கூட்டணி வைப்பதை விரும்ப மாட்டார். அதிமுக உடன் விஜய் செல்வதை செங்கோட்டையன் தடுத்து விடுவார். அதிமுகவின் பழைய தலைவர்கள், பலரும் கூட தவெக பக்கம் வருவதற்கான வழியை செங்கோட்டையன் ஏற்படுத்தி கொடுப்பார். விஜயின் கூட்டணியை எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இது பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
தவெக கட்சிக்கு வழக்கமான இரண்டாவது அல்லது மூன்றாவது அடுக்கு தலைமை இல்லை. தவெகவைப் பொறுத்தவரை, செங்கோட்டையன் முதல் மூத்த முகமாக இருப்பார். கொங்கு மண்டல முகமாக மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க மூத்த அரசியல் தலைவராக செங்கோட்டையன் தவெகவிற்கு பணிகளை செய்வார். இப்போது விஜய் திமுகவை கடுமையாக எதிர்க்கிறார். பலமான அதிமுக நிர்வாகிகளின் வருகை காரணமாக.. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளும் விஜய் பக்கம் செல்வார்கள். மேலும், கட்சியின் உள் கட்டமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், கட்டுப்பாடுடனும் செயல்பட வாய்ப்புள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்தவர் கட்சியின் ஒழுங்கை நிலைநாட்ட முடியும்.
தேர்தல் பிரச்சார உத்திகள் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை செங்கோட்டையனின் அனுபவம் மேம்படுத்தும். செங்கோட்டையன் ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களையே வகுத்தவர். அதன்படியே விஜயின் திட்டங்களை அவர் வகுக்க முடியும். செங்கோட்டையன் வருகையால்.. தவெகவில் வாக்குச்சாவடி அளவிலான மேலாண்மை மற்றும் அடிமட்ட ஒருங்கிணைப்பு மிகவும் வலுவடையும். கிராமப்புற மற்றும் பாரம்பரிய வாக்காளர்களிடையே TVK-வின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் திட்டமிடல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகள் மிகவும் சீரானதாக மாறும்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தவர். சின்ன வயசிலேயே எம்.எல்.ஏ என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.. அதற்கப்புறம் அந்த பயணத்தில் அந்த இயக்கத்தில் இரு பெரும் தலைவர்களுக்கு பெரிய நம்பிக்கைக்கு உரியவராக அரசியல் களத்தில் இருந்தவர் செங்கோட்டையன்.
இப்படி 50 வருடமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்று அவர்களின் அரசியல் அனுபவமும் அரசியல் களப்பணியும் நம்முடைய தவெகவிற்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று அவுங்களுக்கும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும் வெற்றி நிச்சயம்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.