படிப்பறிவில்லாத பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த நபர் தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூட்டை வங்கிக்குச் சுமந்து வந்த செயல் பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமிய வங்கியில், மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டம், படானா பிளாக்கில் உள்ள தியனாலி கிராமம் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஜீத்து முண்டா. இவரது மூத்த சகோதரி கர்லா முண்டா, கடந்த ஜனவரி 26-ந் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்து விட்டார்.. கர்லா முண்டா தான் வளர்த்து வந்த கால்நடைகளை விற்றுச் சேர்த்த சுமார் 19,300 ரூபாய் தொகையை ஒடிசா கிராமிய வங்கியில் அதாவது மாலிபோசி கிளையில் சேமித்து வைத்திருந்தார். அவருக்குச் சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாததால், தம்பி ஜீத்து முண்டா அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்குச் சென்றுள்ளார்.
படிப்பறிவில்லாத ஜீத்து முண்டாவிடம், வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்களைக் கேட்டுள்ளனர். மேலும் ஜீத்து முண்டா பலமுறை வங்கிக்கு அலைந்தும் ‘பணத்தை எடுக்க வேண்டும் என்றால் கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள்’ என்று சொல்லி உள்ளனர். என் அக்கா இறந்துவிட்டார் என்று ஜீத்து முண்டா பலமுறை சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இதனை தொடர்ந்து, திங்கள்கிழமை மதியம் 1 மணி அளவில், ஜீத்து முண்டா தனது சகோதரியின் எலும்புக்கூட்டை ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் கட்டி, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுட்டெரிக்கும் வெயிலில் தோளில் சுமந்து வங்கிக்கு வந்துள்ளார்.
வங்கியின் வாசலில் எலும்புக்கூட்டை வைத்ததைக் கண்டு ஊழியர்களும் பொதுமக்களும் கடும் பீதியடைந்தனர். தகவலறிந்து வந்த படானா காவல் ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு, ஜீத்து முண்டாவைச் சமாதானப்படுத்தி எலும்புக்கூட்டை மீண்டும் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஜீத்து முண்டாவின் அவசர தேவைகளுக்காக ரெட் கிராஸ் நிதியிலிருந்து உடனடியாக 20,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அவருக்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்றுத் தந்து, வங்கியிலுள்ள பணத்தை உடனடியாக அவரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.