தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செய்வதை போல திமுக – தவெக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற கோணத்தில் O. பன்னீர்செல்வம், TTV தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகியோரை TVK -வுடன் கூட்டணி அமைத்து தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க செங்கோட்டையன் வைக்கப் போகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பணிகளை பிரதான அரசியல் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதி மும்முரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆளும் திமுக பல்வேறு கட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில், இரண்டு பிரதான கட்சிகளுடன் 2026 தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. மேலும் திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் இன்னும் நிலையற்ற தன்மை தொடர்கிறது.
2 லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களில் என தொடர்ந்து வென்ற வெற்றிக் கூட்டணியான திமுக, காங்கிரஸ் மற்றும் சில கூட்டணிக் கட்சிகள் அடங்கிய தற்போதைய கூட்டணி முதல் அணியாக உள்ளது. இந்த கூட்டணி நிர்வாகச் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை முன்னிறுத்தி, எதிரணிகளை விமர்சிப்பதன் மூலம் தனது வலிமையை உறுதிப்படுத்த முயல்கிறது.
தமிழ் அடையாளம், மொழி, உரிமைகளுக்காகப் பேசும் வலுவான மாற்றாக முன்னிலை படுத்தும் நாம் தமிழர் கட்சி இரண்டாவது அணியாக களத்தில் உள்ளது. இக்கட்சி, பெரிய கூட்டணி இல்லாமல் இருந்தாலும், அதன் வலுவான பேச்சுகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது அணியாக உள்ளது. உட்கட்சி சவால்கள் மற்றும் பாஜக தலைமை மாற்றங்களுக்குப் பிறகு, தங்கள் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த இந்த அணி முயற்சிக்கிறது. நிறைய மோதல்கள், உட்கட்சி வருத்தங்கள் இருந்தாலும் கூட்டணி வலிமையாக உள்ளது. தேசிய அளவிலான தொடர்புகளையும், அமைப்புக் கட்டமைப்பையும் நம்பி, அரசியல் களத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க முனைப்புக் காட்டுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக் கூடாது என்ற உறுதியான முடிவை எடுத்த விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) நான்காவது அணியாகும். செங்கோட்டையன், நாளைய தினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி உடனான செங்கோட்டையனின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளும், அரசியல் வரலாறும் அத்தகைய கூட்டணியை ஏற்க மறுப்பதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
இதனால், தமிழக வெற்றி கழகத்தின் முடிவுகளில் செங்கோட்டையன் செல்வாக்கு செலுத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிக பவர் இருக்கும் என்பதால்.. அவர் அதிமுக கூட்டணி உருவாகாமல் பார்த்துக்கொள்வார். மேலும் O. பன்னீர்செல்வம், TTV தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகியோரை TVK -வுடன் கூட்டணி சேர வைத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் செய்வதை போல திமுக – தவெக-வுக்கும் இடையே தான் போட்டி என்ற கோணத்தில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க போகின்றதா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்