விஜய் ‛புலி’ படத்துக்கு வாங்கிய ரூ.15 கோடியை மறைத்து வருமான வரி தாக்கல் செய்ததாக கூறி ரூ.1.50 கோடியை வருமான வரித்துறை அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த வழக்குக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. புலி படத்து வருமானத்தை மறைத்ததாக கூறி தவெக தலைவர் விஜய்க்கு வருமான வரித்துறை கடந்த 2022-ஆம் ஆண்டில் நோட்டீஸ் வழங்கியது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2016-2017 நிதி ஆண்டுக்கான வருமான வரியை விஜய் தாக்கல் செய்தார். அப்போது ரூ.35.42 கோடி வருமானம் ஈட்டியதாக குறிப்பிட்டு இருந்தார். அதற்கான மதிப்பீட்டு நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். குறிப்பாக விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.

அப்போது நடிகர் விஜய் தனது வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை கூறியது. அதாவது விஜய் தான் நடித்த புலி படத்துக்கு பெற்ற சம்பளத்தில் ரூ.15 கோடியை வருமானத்தில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை கூறியது. இதற்காக ரூ.1.50 கோடியை அபராதமாக செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை எதிர்த்தும், ரூ.1.50 கோடி அபராதமாக செலுத்தக்கூறும் வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வருமான வரித்துறையின் உத்தரவுக்கு ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்தார். அப்போது விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛விஜய்க்கு அபராதம் செலுத்தகோரி 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பாகவே வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்க வேண்டும். ஆனால் வருமான வரித்துறை காலதாமதமாக 2022-ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதனால் இந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதையடுத்து வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛வருமான வரித்துறை சட்டத்தின்படி விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் சட்டப்படி தான் வழங்கப்பட்டுள்ளது. இது சரிதான்” என்று வாதிட்டார். இதற்கு விஜய் தரப்பு, ‛‛இதுபோன்ற நடவடிக்கைகளில் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார். அதனை கேட்டு கொண்ட நீதிமன்றம், ‛‛சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்யுங்கள்” எனக்கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.