பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 5 காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த ஜூலை 27-ந் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை காவல்துறை கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
ஆனால் 6 காவல்துறையினரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம், CBCID விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை நேற்று இரவு கிடைத்தது. இதன் அடிப்படையில் 5 காவல்துறையினர் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் ஆளிநர்கள் உடனடியாக 28.06.2025 அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடைமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்று இரவு கிடைத்தவுடன் எந்த காலதாமதமும் இன்றி. உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன், இவ்வழக்கை கொலை வழக்காக சட்டப்பிரிவுகளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 காவல் ஆளிநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS) Act ன் பிரிவு எண். 196(2)(a) ன் கீழ், குற்ற எண். 303/2025 ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க சம்பவத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்டுள்ளது. கடந்தகாலங்களை ஒப்பிடும்போது. கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது எவ்வித தயவு தாட்சண்யமும் இன்றி உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டுள்ளது என காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.