திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை விடுவிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி தாசில்தார் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புதுறை கைது செய்தனர்.
சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளதால், நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை பல்வேறு வழித்தடங்களில் அரசு மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை தமிழக அரசு நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தியது. அரசு அதற்காக சுமார் ரூ.48 லட்சம் இழப்பீடு தொகையாக கொடுக்க வேண்டியிருந்தது. இத்தொகையை பெற பலமுறை திருவள்ளூர் நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன் என்பவரிடம் அந்த நிறுவனத்தின் மேலாளரான திருவொற்றியூர் சார்லஸ் நகரை சேர்ந்த ஆஸ்டின் ஜோசப் அணுகியுள்ளார்.
பலமுறை சென்று வலியுறுத்திய போதும், நில எடுப்பு தொகையை விடுவிக்கவில்லையாம். திருவள்ளூர் தனி தாசில்தார் எட்வர்ட் வில்சன் காலதாமதம் செய்து வந்தாராம். இந்நிலையில் ரூ.1 லட்சம் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை விடுவிக்க முடியும் என தாசில்தார் வில்சன் குறிப்பிட்ட நிறுவனத்தினரிடம் கூறினாராம்.
இதனால் கோபம் அடைந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் லஞ்சம் கொடுக்க விரும்பாமல் இதுகுறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருவள்ளூர் நில எடுப்பு தாசில்தாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புதுறை ரூ.75 ஆயிரம் பணத்தில் ரசாயனபொடி தடவி மேலாளரை அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து போளிவாக்கத்தில் உள்ள நிறுவனத்திற்கு வந்து பணத்தை பெற்று கொள்ளும்படி தனி தாசில்தார் எட்வர்ட் வில்சனிடம், மேலாளர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளூர் தனி தாசில்தார் வில்சனுக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோர் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் ரசாயனம் தடவிய ரூ.75 ஆயிரத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புதுறை அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இத்தனைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து லஞ்ச ஒழிப்புதுறை அங்கு பணியிலிருந்த தனி தாசில்தார் வில்சனையும் அதிரடியாக கைது செய்து சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களிடம் இதுவரை எவ்வளவு லஞ்சம் வாங்கியது எவ்வளவு என்று விசாரித்து வருகிறார்கள்.