அமமுக பொதுச்செயலாளர் தினகரனை அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அவர்களை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே 2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில முன்னாள் அமைச்சர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா திமுகவை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார்.
வி.கே. சசிகலா கடிதம் எழுதிய அடுத்த நாளே ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். அடுத்தடுத்த நாட்களில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார். இதனைத் தொடர்ந்து, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக நிர்வாகிகள் திண்டுக்கலில் கூட்டத்தை கூட்டியுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை அதிமுக மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் மற்றும் தங்கமணி ஆகியோர் ஒரே அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்எல்ஏ அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.” என எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தினார்.
கொஞ்ச நாட்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்குச் சென்ற செங்கோட்டையன் அங்கு டிடிவி தினகரனை சந்தித்தார். இரு தலைவர்களும் சுமார் 1 மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகியிருந்தார். இன்றைய தினம் இது தொடர்பாக அவர் மீண்டும் விளக்கமும் அளித்தார்.
அதாவது கூட்டணி குறித்த மறுபரிசீலனைக்கு அவசியம் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் கூறியிருந்தார். முன்பு டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை, மீண்டும் கூட்டணிக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில் தான் இப்போது செங்கோட்டையனும் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.