அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோயில் அமைச்சர் பி. கே. சேகர்பாபு முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோயில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. மற்ற 5 படை வீடுகளும் மலைப்பகுதிகளில் அமைந்திருக்க, திருச்செந்தூர் கோயில் மட்டுமே கடற்கரை ஓரத்தில் அமைந்து இருக்கும் வகையில் பிரசித்தி பெற்றதாக இக்கோயில் இருக்கிறது.
இந்த கோயில்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஆனால் திருச்செந்தூர் கோயிலுக்கு 12 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்குக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.
அதேபோல மறுபுறம், எச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் ரூ.200 கோடியும் குடமுழுக்குக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கோயிலை புதுப்பிக்கும் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்றன. முதற்கட்டமாக கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு, சிற்பங்கள் புதுப்பிக்கப்பட்டன. ராஜ கோபுரத்தின் கீழ் தளம், தூண்கள், 9 கோபுர கலசங்களும் பழமை மாறாமல் புதுப்பித்தல், கலசங்களில் மீண்டும் தானியங்களை நிரப்புதல் ஆகிய பணிகள் நடைபெற்றன.
இதற்காக சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் கோபுர கலசங்கள் பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வரப்பட்டு புதுப்பிக்கப்பட்டன. மேலும் வள்ளி குகை, பஞ்ச லிங்கம், நாழி கிணறு உள்ளிட்டவையும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, குடமுழுக்கு பணிகள் தீவிரமடைந்தன. இந்நிலையில் கடந்த 28-ந் தேதி பி. கே. சேகர்பாபு மற்றும் கனிமொழி எம்பி கோயிலில் குடமுழுக்கு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது “பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், கோயில் உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் குறித்தும், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இறுதியாக அமைச்சர் பி. கே. சேகர்பாபு முன்னிலையில் இன்று திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்று இருக்கிறது. இந்த குடமுழுக்கில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்க சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.