மயிலாடுதுறையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் மணிமாறன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாமகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் கொலைக்கு பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளரான மணிமாறன். இவர் மயிலாடுதுறையில் நடைபெற்ற தவாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்வதற்காக மயிலாடுதுறை வந்திருந்தார். இதன்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிவடைந்த பின், மீண்டும் காரைக்காலுக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார்.

இந்நிலையில் செம்பனார்கோயில் தாமரை மெட்ரிக்/CBSE மேல்நிலை பள்ளி அருகே திடீரென கார் வழிமறிக்கப்பட்டு மர்ம நபர்கள் காரை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், காரில் இருந்த மணிமாறனை வெளியில் இழுத்து போட்ட மணிமாறன் அச்சத்தில் ஓடி இருக்கிறார். ஆனால் அந்த கும்பல், மணிமாறனினை ஓட ஓட விரட்டி தலையை முற்றிலும் சிதைத்து கொலை செய்து இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கொலை குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால மாவட்ட பாமக செயலாளராக இருந்த தேவமணி ஆதரவாளர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, திடீரென வழிமறித்த மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேவமணியின் வீட்டிற்கு அருகிலேயே நடத்தப்பட்ட இந்த கொலை சம்பவம் காரைக்கால் பகுதியையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக தவாகவின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் சேர்க்கப்பட்டு இருந்தார். இதனால் தேவமணியின் ஆதவாளர்கள் மூலமாக இந்த சம்பவம் பழிக்கு பழியாக செய்யப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.