பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 5 காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த ஜூலை 27-ந் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தியபோது அஜித்குமார் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரை காவல்துறை கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை காவலர்கள் ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்த், ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அஜித்குமார் கொலை வழக்கு விவகாரத்தில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ரவாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.