காதலி இன்ஸ்டாகிராமில் வேறு ஒருவரிடம் பேசுவதைப் பார்ப்பது அதிர்ச்சியடைந்த காதலன் செய்த காரியத்தால் கண்ணீர் மல்க வாக்குமூலம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த காவலர் பயிற்சி பள்ளியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தைச் சேர்ந்த பால் வியாபாரி வெள்ளைச்சாமியின் மகள் உமா மற்றும் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கொளக்காட்டான் குறிச்சியைச் சேர்ந்த மாரிச்சாமியின் மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் படித்தனர்.
இந்த காவலர் பயிற்சி பள்ளியில் படித்த ராஜேஷ் மற்றும் உமா ஆகிய இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் நாளடைவில் காதலர்களுக்குள் தகராறு ஏற்பட்ட இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய முன்தினம் பயிற்சி கட்டணம் செலுத்துவதற்காக, காவலர் பள்ளிக்கு உமா வந்திருந்தார். அப்போது உமாவை ராஜேஷ் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் உமா சரியாக பேசாததால், நேரில் வந்தால் விரிவாக பேசலாம் என்று கூறி சமாதானத்துக்கு ராஜேஷ் அழைத்துள்ளார்.

உமாவும் இதற்கு ஒப்புக் கொள்ளவும், அன்று மாலையே, உமாவை பைக்கில் கஸ்தூரி ரெங்கபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துராஜேஷ் சென்று அங்கு பேசும் போது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சக்கட்ட கோபம் அடைந்த ராஜேஷ், உமாவை தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில் உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதன் பின்னர் ராஜேஷ் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை கழுகுமலை காவல்துறையினரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடைமுறைகளின்படி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இறந்த உமாவின் உடல், பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு சாட்சிகள் வாக்குமூலங்கள் வாங்கப்பட்டது. அப்போது, “தென்காசி மாவட்டம், பாறைப்பட்டி காவலர் பயிற்சி பள்ளியில் படித்த உமாவும், நானும் கடந்த 8 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தோம். ஆனால் திடீரென இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வேறொருவருடன் உமா தொடர்பில் இருந்தார். இது எனக்கு தெரிய வந்ததுமே அதிர்ச்சி அடைந்தேன். இதை பற்றி உமாவிடமே நேரடியாக கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் கொஞ்ச நாட்கள் பேசாமல் இருந்தோம். நேற்று பயிற்சி பள்ளியில் ஃபீஸ் கட்டுவதற்காக உமா வந்தது தெரியவந்தது. உடனே போனில் பேசினேன். நேரில் வருவதாக சொல்லி பயிற்சி பள்ளிக்கு சென்றேன். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு மனம் விட்டு பேசுவதற்காக உமாவை கஸ்தூரி ரெங்கபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் பேசியது குறித்து கேட்டேன். இதில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த நான், கோபத்தில் அவளது கழுத்தை நெரித்தேன். அவள் மயங்கி விழுந்தாள். இதை பார்த்ததுமே எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து உமாவை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தேன். ஆனால் உமா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் உமாவை கொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவள் இறந்து விட்டாள். ஆத்திரத்தில் தவறு செய்து விட்டோமே என வேதனை அடைந்ததால், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்தேன்” என்று கண்ணீர் மல்க ராஜேஷ் தெரிவித்தார்.இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.