அரசு கல்லூரி மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பரப்பியதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பெண் முதல்வர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டையில் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் முதுகலை 2-ஆம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒழுங்காக பாடம் நடத்தவில்லை என்று யூடியூப்பில் பேசி வீடியோ வைரலாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மாணவி கடந்த மாதம் டிசம்பர் 1-ந் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த சுமிதா (தற்போதைய கல்லூரி முதல்வர்) என்பவரது சமூக வலைதளப் பக்கத்தில் தன்னைப்பற்றிய அவதூறு கருத்துகள் பதிவிடப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மாணவியின் புகாரை அடுத்து, சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கல்லூரி முதல்வர் சுமிதா மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் அவரது கணவர் பொன்னுதுரை ஆகிய இருவருமே இணைந்து இந்த அவதூறு மற்றும் ஆபாசக் கருத்துகளைப் பரப்பியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் செந்தாமரை கண்ணன் நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் ஆய்வாளர் சண்முகவடிவு, உதவி ஆய்வாளர் கலை சந்தனமாரி ஆகியோர் நேற்று காலையில் சுமிதா, பொன்னுதுரை ஆகியோரிடம் சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். நீண்ட விசாரணைக்கு பிறகு, 2 பேரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.