ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் முதலமைச்சராகும் கனவில் இருந்தார். அதுவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழாவையொட்டி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.கே. சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், TTV. தினகரன், O. பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் என மூவரும் ஒரே நேரத்தில் திடீரென ஒன்றாக வந்து மரியாதை செலுத்தினர். அது போல் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது “என்னை கட்சியில் இருந்து நீக்கினால் மகிழ்ச்சிதான்,” என செங்கோட்டையன் பேசினார். இதையடுத்து TTV. தினகரன் புறப்பட்டுச் சென்ற நிலையில் O. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் சிறிதுநேரம் காத்திருந்து வி.கே. சசிகலாவை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இருவரும் வி.கே. சசிகலாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து, நேற்று சேலத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். நீண்ட ஆலோசனை முடிவில் கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக கூறி, ஏற்கனவே கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டும் நீக்கப்பட்டிருந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ” திமுகவின் B-டீமில் நான் இல்லை, கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிதான் A1 ஆக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சாட்டப்படும் கொடநாடு விவகாரத்தில் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
2026-இல் அதிமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்றேன். 2026-இல் அதிமுக தோற்றால் கேள்வி கேட்பார்கள் என்பதால் தான் நான் பேட்டியளித்தேன். 1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன். அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5-ந் தேதி மனம் திறந்து பேசினேன்.
தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கான பரிந்துரைக் கடிதத்தை எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றவன் நான். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.” என செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் செங்கோட்டையன் பேசுகையில், துரோகத்திற்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனில் அதனை தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் கொடுக்க வேண்டும். அதிமுகவை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். இதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கம். தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 53 ஆண்டுகள் காலம் கட்சியில் இருந்த என்னை நீக்கியது கேள்விக்குறியானது. விதியின் கீழ் என்னை நீக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார். அப்போது, கொடநாடு வழக்கில் A -1 எடப்பாடி பழனிசாமி தான் என்ற வகையில் செங்கோட்டையன் பேசியது பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு, ‘பிடிச்சு உள்ள போடுங்களே… சட்டப்படி செய்யுங்களேன். அவர்தான் அக்யூஸ்ட் என்றால் போலீஸ் என்ன செய்கிறது… A -1 ஆக இருக்கிறவரை ஜெயிலில் போட வேண்டியதுதான் திமுகதானே ஆட்சியில் இருக்கிறது. திராணி இருந்தால், சரியான சட்டங்கள் இருந்தால் கைது செய்யுங்கள். திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டதே” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவது தெய்வத்தின் தீர்ப்பு. எடப்பாடி பழனிசாமியை விட வயதில் மூத்தவர் என்பதாலேயே ஒருவர் மூத்த நிர்வாகியாகி விட முடியுமா? பழனிசாமிக்கு முன்பாக பிறந்துள்ளவர் என்ற ஒரு தகுதியை மட்டும் செங்கோட்டையன் பெற்றுள்ளார். அதை தவிர மற்ற அனைத்து தகுதிகளையும் பழனிசாமி பெற்றுள்ளார்.
செங்கோட்டையன் முதல்வர் வாய்ப்பை 2 முறை விட்டுக் கொடுத்துள்ளதாக கூறுகிறார். வாய்ப்பு வந்தும் ஏன் விட்டுக் கொடுத்தார்? வாய்ப்பு வந்தால் யாராவது முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பார்களா?. பிக் பாக்கெட் அடிப்பது போல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் முதலமைச்சராகும் கனவில் இருந்தார். அதுவே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்குக் காரணம். தி.மு.க வெற்றி பெறும் என்று கூறிய ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் சேர்ந்ததாலேயே அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் டிடிவி தினகரன். அவர் அதிமுகவை பற்றி சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ஆளே கிடையாது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக சட்டத்தின்படியும், பொதுக்குழு முடிவின்படி நீக்கப்பட்டவர்கள். அ
தனால், செங்கோட்டையன் உள்பட அவர்கள் 4 பேரையும் அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு “B -டீம்” ஆக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உட்பட எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பவர்கள் எல்லாம் 1972 ஆண்டு முதல் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து இந்த இயக்கத்தில் உள்ளோம். நாங்கள் சொல்கிறோம், அவர்கள் நான்கு பேரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம்.” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.