ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபருக்கு தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பார்சல் வந்திருப்பதாகவும் அந்த பார்சலில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் மர்ம நபர் குற்றம் மிரட்டி டிஜிட்டல் அரெஸ்ட் செய்து தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை பறித்தது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் முதலீடு என்ற பெயரில் டிஜிட்டல் அரஸ்ட், ஆன்லைன் முறைகேடுகள், வங்கி நிதி முறைகேடுகள் போன்றவற்றின் மூலம் 2025-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 3,203 கோடி, கர்நாடகாவில் 2,413 கோடி மற்றும் தமிழகத்தில் 1,897 கோடி உற்பட 19,812 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ந் தேதி மர்ம நபர் வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை காவல்துறையில் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்த மர்ம நபர், தொழிலதிபரை மிரட்டும் தொனியில் பேசினார். தொழிலதிபர் பெயருக்கு தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பார்சல் வந்திருப்பதாகவும் அந்த பார்சலில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் மர்ம நபர் குற்றம் சாட்டினார். இதற்காக அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகவும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் மிரட்டினார்.
கடந்த 28-ந் தேதி மற்றொரு மர்ம நபர் பேசினார். மும்பை காவல்துறையில் மூத்த அதிகாரி என்று கூறிய அந்த நபர், “பார்சலில் வந்த போதைப் பொருளுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க தொழிலதிபரின் பெயரில் இருந்த மியூச்சுவல் பண்ட், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகையைப் பணமாக மாற்ற மர்ம நபர் உத்தரவிட்டார். அதன்படி ரூ.7.12 கோடியை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு தொழிலதிபர் அனுப்பி வைத்தார். கடந்த 29-ந் தேதி தொழிலதிபரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், மேலும் ரூ.1.2 கோடியை தருமாறு மிரட்டல் விடுத்தார்.
இதனிடையே தொழிலதிபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விசாரணை நடத்திய போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஹைதராபாத் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது வீட்டிலேயே உங்களைச் சிறை வைத்து, உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யும் ஒரு புதிய வகை மிரட்டல் தான் இந்த டிஜிட்டல் அரெஸ்ட். ஒருவரின் பயத்தை மூலதனமாக கொண்டு தான் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. உங்கள் மொபைல் போன் வழியாகவே, உங்களை பயமுறுத்திப் பணம் பறிக்கும் இந்த மாயக் கும்பலிடம் இருந்து தப்பிக்க மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது முற்றிலும் ஏமாற்று வேலை. காவல்துறை அல்லது எந்த ஒரு அமைப்பும் வீடியோ கால் அல்லது மெசேஜிங் ஆப் மூலம் யாரையும் கைது செய்யவோ அல்லது விசாரணை நடத்தவோ மாட்டார்கள். மேலும் வீடியோ காலில் அல்லது மற்ற அம்சங்கள் மூலம் உங்களுடைய தனிப்பட்ட ஆவணங்களையோ அல்லது ரகசிய ஆவணங்களையோ கேட்க மாட்டார்கள்.
பயத்திற்கோ, நெருக்கடிக்கோ அடிபணியாதீர்கள் மோசடியாளர்கள் எப்போதும் உங்களை நிதானமாக சிந்திக்க விடக்கூடாது என்பதற்காக, ஒரு பதற்றமான சூழலிலேயே வைத்திருப்பார்கள். இப்போதே பணத்தை கட்டுங்கள். இல்லையெனில் சிறைதான் என மிரட்டுவார்கள். அதுபோன்ற நேரங்களில் பயப்படாமல், அந்த இணைப்பை துண்டித்து விட்டு அதிகாரப்பூர்வ அமைப்புகளைத் தொடர்பு கொண்டு, பிரச்சனையை தெரிவியுங்கள்.
மேலும் அரசு ஒருபோதும் பணம் கேட்காது? பொதுவாக ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காவல்துறையினரோ, நீதிமன்றமோ அல்லது எந்தவொரு அரசுத் துறையோ விசாரணை என்ற பெயரில் அல்லது சரிபார்ப்பு என்ற பெயரில் உங்களை வங்கிப் பரிமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தாது. அப்படி யாராவது உங்களிடம் பணம் கேட்டால் அது கட்டாயம் மோசடியாக தான் இருக்கும். ஆக அதுபோன்ற கோரிக்கையை நிராகரியுங்கள். அப்படியும் சந்தேகம் என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனையை கூறுங்கள். சுயமாகச் சரிபார்க்கவும் யாராவது உங்களை மிரட்டினால், உடனடியாக உள்ளூர் காவல் நிலையம் அல்லது உங்கள் வங்கி மேலாளர் அல்லது நீங்கள் நம்பும் குடும்ப உறுப்பினர்களிடத்தில் சொல்லுங்கள்.
எதற்காகவும் பதற்றமடையாமல் நிதானமாக இருங்கள். சந்தேகத்திற்கு உரிய அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்தால் புகார் அளியுங்கள். தாமதிக்காமல் புகார் செய்யுங்கள் ஒருவேளை நீங்கள் மோசடியாளர்களால் பணத்தை ஏமாந்து விட்டால், ஒரு நிமிடம் கூட வீணாக்காதீர்கள். உடனே வங்கிக்கும், சைபர் கிரைம் ஹெல்ப்லைனுக்கும் தெரிவியுங்கள். எவ்வளவு விரைவில் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்கள் பணத்தை மீட்க முடியும். மோசடியாளர்களின் கணக்கை ஆரம்பத்திலேயே முடக்கி பணத்தை ஹோல்டு செய்து வைக்க முடியும்.
தவறு நடந்துவிட்டது என்று கத்தி கூச்சலிடாமல், உடனே பணத்தை மீட்பதற்காக வேலையில் இறங்குங்கள். பொதுமக்கள் இணையவழி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, மிகுந்த கவனத்துடன், நம்பகத் தன்மையை உறுதி செய்த பின்னரே ஈடுபட வேண்டும் என்றும், ஏதேனும் சைபர் மோசடி நடந்தால் உடனடியாக 1930 என்ற அவசர எண்ணை அழைத்து புகார் தெரிவித்து உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்