எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டை உலுக்கிய பல்வேறு முக்கியமான பிரச்சனைகளில் நம்முடைய கேள்விகளே இந்த ஸ்டாலின் மாடல் அரசைத் துளைத்துள்ளன. அந்த வகையில் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திலும் நாம் சில கேள்விகளைக் கேட்க விழைகிறோம்.
1. காவல்துறை அஜித்குமாரை முறைப்படி FIR பதிவு செய்து கைது செய்ததா? அப்படி எனில், கைதுக்கான ஆவணம் எங்கே?
2. மாவட்டக் கண்காணிப்பாளரிடம் நேரடியாக இயங்கும் தனிப்படை இதனை விசாரிக்கும் அளவிற்கு யாருடைய தலையீடு இருந்தது? சந்தேகத்தின் பெயரில் போடப்பட்ட திருட்டு வழக்கில் ஒரு மாவட்ட SP-யே நேரடியாக தலையிட வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு ஏதேனும் அழுத்தம் வந்ததா? அப்படி என்றால், யாரிடம் இருந்து வந்தது?
3. வேக வேகமாக அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? உடலில் உள்ள காயங்கள் உள்ளிட்ட குற்றத்திற்கான தடயங்களை அழிப்பதற்கான முயற்சியா இது? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
4. தானும் தன் அண்ணனும் காவல்துறையால் தாக்கப்பட்டதாக அஜித்குமாரின் தம்பி பேட்டி அளித்துள்ளார். கைது செய்யப்படாத அஜித்குமாரின் தம்பியை எதற்காக காவல்துறை தாக்க வேண்டும்? நீதிபதி வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறி அஜித்குமாரின் தம்பி மற்றும் இரு உறவினர்களை காவல்துறை, தங்கள் வாகனத்தில் ஏற்றாமல், திமுக ஒன்றிய கவுன்சிலர் சுப்பையாவின் திமுக கொடி கட்டிய காரில் கடத்த முனைந்ததை அஇஅதிமுக மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் திரு. PR செந்தில்நாதன் மற்றும் கழகத்தினர் தடுத்தனர். திமுக காரில் அஜித்குமாரின் தம்பியை கடத்த முற்பட்டது ஏன்?
5. அதுமட்டுமல்லாமல், திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன், சனிக்கிழமை இரவு காவல் நிலைய வாசலில் வைத்து அஜித்குமார் குடும்பத்தார் மற்றும் சார்ந்தோரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக செய்திகள் வருகின்றனவே… எதற்காக திமுக இந்த சம்பவத்தில் இவ்வளவு முனைப்பு காட்ட வேண்டும்?
6. இந்த வழக்கை BNS SECTION 103-ல் பதிவு செய்ததா காவல்துறை? அல்லது பொம்மை முதல்வருக்கு அதை நினைவூட்ட வேண்டுமா?
7. ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இது 25-வது Documented Lockup Death. அதிலும், இவ்வழக்கில் மிளகாய்ப் பொடி, பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவை கொண்டு அஜித்குமார் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அஜித்குமார் உடலில் 18 காயங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த 25 உயிர்களை துடிதுடிக்கக் கொன்றது யார்? இதற்கு யார் பொறுப்பு?
கேள்விகள் இங்கே. பதில்கள் வருமா மு.க. ஸ்டாலின்மற்றும் அறிவாலயம் இடம் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் கேட்டு சொல்லவும் என எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அடுத்த நொடியில் இருந்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த வகையில் செங்கல்பட்டு அதிமுக கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் S. ஆறுமுகம் தலைமையில் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் 25-வது லாக்கப் மரணமான திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.