கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கணவனை தண்ணீரில் மாத்திரைகளை கலந்து கொடுத்து அயர்ந்து தூங்கியபோது கழுத்தையும் நெரித்து மனைவி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ். இவரது மனைவி பெயர் தனியார் பள்ளியில் அலுவல ஊழியரான சவுமியா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சவுமியாவுக்கும், அதே பள்ளியில் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரான திலீப் என்ற நபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பள்ளியில் எந்நேரமும் பேசி கொண்டே இருக்கும் இந்த ஜோடி, பனி முடிந்து வீட்டுக்கு வந்தபோதும் நீண்ட நேரம் அலைபேசியில் பேசியுள்ளனர். இந்த விஷயம் ரமேஷூக்கு தெரிந்து சவுமியாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது.

இதனிடையே, ரமேஷ் ரூ.2 கோடிக்கான காப்பீடு செய்திருப்பது சவுமியாவுக்கு தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ரமேஷை கொன்றால் ரூ.2 கோடி காப்பீடு பணம் கிடைக்கும் என சவுமியா, திலீப்புக்கு ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதைக்கேட்டு திலீப், பணத்துக்காக ரமேஷை கொல்ல திட்டமிட்டார். இதற்காக திலீப் தனது தம்பி அபிஷேக்கிடம் சொல்லி பிளான் போட சொன்னார். இறுதியில் திட்டமிட்டபடி, 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது காரை மோதியுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் உயிர் தப்பினார், ஆனாலும் கை எலும்பு முறிந்துவிட்டது.
பிறகு, அபிஷேக் தனது நண்பரான ரவுடி கும்பல் தலைவன் ஜிதேந்திராவை திலீப்பிற்கு அறிமுகப்படுத்தினார். திலீப்பும் சவுமியாவும் பேசி, ரமேஷை கொல்ல ரூ.35 ஆயிரம் கொடுத்தனர். அதன்படி, கடந்த டிசம்பர் 19-ந் தேதி இரவு, ரமேஷுக்கு அதிகளவு தூக்க மாத்திரைகள் சவுமியா தண்ணீரில் கலந்து கொடுத்தார்.

அதை குடித்து அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா திலீப், ரவுடி கும்பலை வரவழைத்து, கழுத்தை துணியால் மூச்சு திணறடித்து கொலை செய்தனர். மறுநாள் காலையில், ரமேஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சவுமியா அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூறி நாடகமாடி உள்ளார்.. இறுதிச் சடங்கு முடிந்து உடலையும் அடக்கம் செய்துவிட்டனர்.
அவசர அவசரமாக இறுதி சடங்கை செய்ததால், வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, அண்ணனின் இறுதிச் சடங்குக்கு வரமுடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும், அலைபேசியில் இறப்பு, இறுதிச் சடங்கு புகைப்படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. அந்த புகைப்படங்களை உற்றுப்பார்த்த போதுதான், ரமேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த கோதாரி, ரமேஷின் வீடு அருகே வசிக்கும் தனது மனைவிக்கு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தார்..உடனே காவல் துறையினரும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சவுமியா உண்மையை ஒப்புக் கொண்டார். தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக பகிரங்க வாக்குமூலம் தந்தார். இதையடுத்து, ரமேஷின் சடலம் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. சம்பவத்தில் சவுமியா, திலீப், அபிஷேக், ரவுடி கும்பலான ஜிதேந்தர், ஸ்ரீராம் மற்றும் ராகேஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.