அண்ணே நீங்க அப்படியே பேசிட்டு இருங்க பிரியாணி வாசனை மூக்கை துளைக்குது அந்த பிரியாணி ஒரு கை பார்த்து விட்டு வரோம் என்ற தொனியில் பூத் கமிட்டி ஆலோசனை சிறப்பு கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேச்சை கேட்காமல் பிரியாணியை ஒரு பிடிபிடிக்க சென்ற அதிமுக தொண்டர்களால் சலசலப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு மேற்கு, கிழக்கு ஒன்றிய சார்பில் அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவாதன் கலந்து கொண்ட பூத் கமிட்டி ஆலோசனை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தேன்மொழி சேகர், வத்தலகுண்டு ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேடையில், அதிமுக நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி சேகர் கூட்டத்தில் நிர்வாகிகளை வரவேற்று பேசினார். அப்போது, வத்தலகுண்டு மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் என்பவர் பெயரை வாசிக்க தவறியதால், ஆத்திரமடைந்த நிர்வாகி மணிகண்டன், மேடையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில் நத்தம் விசுவநாதன் பேசும்போது, அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி வாசனை மூக்கை துளைத்ததால், அண்ணே நீங்க அப்படியே பேசிட்டு இருங்க அந்த பிரியாணி ஒரு கை பார்த்து விட்டு வரோம் என்ற தொனியில், அவரது பேச்சைக் கேட்காமல் தொண்டர்கள் அனைவரும் எழுந்து பிரியாணி உணவு அறைக்குள் முண்டியடித்துக் கொண்டு வேகமாக பிரியாணி சாப்பிட சென்றனர்.

அப்போது தொண்டர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை கவனித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவசர அவசரமாக உணவு அறையின் கதவை மூடச் சொன்னார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டம் விரைவாக முடிக்கப்பட்டது.