சிரஞ்சீவி பிரஜா ராஜியம் என்ற கட்சியை தொடங்கி பிரம்மாண்டமான கூட்டத்தை காண்பித்து பின்னர் பிரஜா ராஜியம் கட்சியை கலைத்துவிட்டு போனது போல தவெக விஜய் காணாமல் போய்விடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வருகின்ற ஒன்றாம் தேதி வருவதை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி ஆலோசனை வழங்கினார். இந்த S.P. வேலுமணி பேசுகையில்,” மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் மூலம் 100 தொகுதிகளில் மேல் பயணத்தை மேற்கொண்டு மாபெரும் வெற்றி சரித்திரம் படைத்து வருகிறார் எடப்பாடி. ஒவ்வொரு தொகுதிகளும் எழுச்சி பயணம் மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதே மதுரை மண்ணில் தான் புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா 2010 -ஆம் ஆண்டு கோவையில் முதன்முதலாக கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்று, மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்து அதற்குப்பின் அம்மா கோட்டைக்கு சென்றார். அதேபோல எடப்பாடி மதுரைக்கு எழுச்சி பயணத்தை மேற்கொண்டு விரைவில் கோட்டைக்கு செல்வார்.
திருமங்கலம் தொகுதிகளில் நாற்பதாயிரம் வாக்களர்கள் பங்கேற்க வேண்டும். எழுச்சி பயணத்தில் எடப்பாடி திமுக செய்யாத திட்டங்களை குறித்தும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்யப் போகும் திட்டங்கள் குறித்து பேசுகிறார். இதன் மூலம் இந்த செய்தி ஒன்றரை லட்சம் மக்களுக்கு செல்லும். மக்கள் வர தயாராக இருக்கிறார்கள். நிர்வாகிகள் நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். திமுக ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறு முறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது.
இன்றைக்கு நடிகர் விஜய் மதுரையில் பேசியுள்ளார். அந்த மாநாட்டில் அதிமுக தலைமை யாரிம் உள்ளது என்ற வார்த்தையை பேசியுள்ளார். அதிமுகவின் தலைவர் எடப்பாடி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் இவருக்கு தெரியவில்லை. சிங்கம் எப்போது ஒருநாள் வெளியே வரும் என்று ஒரு நடிகர் சொல்லி இருக்கிறார்.
இதைவிட பெரிய கூட்டத்துடன் ஆந்திராவில் சிரஞ்சீவி பிரஜா ராஜியம் என்ற கட்சியை தொடங்கினார். பிரம்மாண்டமான கூட்டத்தை காண்பித்தார், ஆனால் கட்சி கலைத்துப் போட்டு விட்டார். எடப்பாடியாரை பற்றி பேச இவருக்கோ,வேறுயாருக்கும் உரிமை கிடையாது . இன்றைக்கு மீடியாக்கள் திமுகவிக்கும் விஜய்க்கும் போட்டி என்று செய்தி போடுகிறார்கள். அதிமுக ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதி வெற்றி வாகை சூடும் மீண்டும் 2026 .ஆண்டு எடப்பாடியார் தான் முதலமைச்சர் இதை விஜய் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது.
எடப்பாடி ஒரு கிளைக் கழக செயலாளர் இருந்து, தன் உழைப்பால் கழகப் பொதுச் செயலாளர் ஆனார். 89ஆம் ஆண்டில் சேவல் சின்னத்தில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் இப்படி படிப்படியாக முன்னேறியவர். இது அனைவருக்கும் தெரியும் ஆனால் விஜய்க்கு தெரியவில்லை” என S.P. வேலுமணி தெரிவித்தார்.