ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான ட்வீட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன் என பார்த்திபன் கட்டமாக பதிலளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர்கள் திரையில் சில புகைப்படங்களைப் போட்டுக் காட்டி அதுகுறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டனர். அதில் நடிகை த்ரிஷாவின் படமும் இடம் பெற்றது. அதுகுறித்து கருத்து தெரிவித்த பார்த்திபன், “இந்த குந்தவையை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது. அது நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது சிறந்தது” என பார்த்திபன் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் “சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தனர். ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், அவருடைய உதவியாளர் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கடைசி நேரத்தில் என்னுடைய பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர்.
கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது. அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக வெளிப்படுத்த மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள், யாரைக் குறித்துப் பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தைப் பற்றியே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டும்” என த்ரிஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
தற்போது பார்த்திபன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “அந்த நிகழ்ச்சியில் த்ரிஷா குறித்து நான் பேசியது உண்மையிலேயே தவறிதான் நடந்தது. நான் மேடையில் விஜய் குறித்தோ அஜித் குறித்தோ பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு ஒரு புகைப்படம் வந்தது.
அதை பார்த்ததும் உண்மையிலேயே நான் திகைத்துப் போய் விட்டேன். ஆனால் வேண்டுமென்றே அந்த போட்டோவை நான் போட சொல்லி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது 100% பொய். ஏனெனில் ஒரு மகளிர் தினம் அன்று நான் யாரைப் பற்றி பேசுவேன் என்றால் வேலு நாச்சியாரை பற்றி பேச ஆசைப்படுவேன் அல்லது அன்னை தெரசாவை பற்றி பேச ஆசைப்படுவேன். அதைவிடுத்து நான் இப்படி பேச ஆசைப்பட்டேன் என்று சொல்வது சரியில்லை.
அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. நடிகர் விஜய் அரசியலில் பல விஷயங்களை கடந்து வந்து கொண்டிருக்கும்போது கரூர் பிரச்சினையை விட அதிக பாதிப்புக்கு காரணமான ஒரு நிகழ்ச்சி இது. அந்த நிகழ்ச்சியில் இந்த பெண்மணி கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று என் அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக நான் அந்த மேடைக்கு செல்லவில்லை.
இந்த விவகாரம் குறித்து நண்பர் சமுத்திரக்கனி கூட தன் ஆதங்கத்தை ஒரு வீடியோவில் வெளிப்படுத்தி இருந்தார். அவர் யாரிடமும் காசு வாங்கிக் கொண்டு அப்படி பேசவில்லை. அன்பு மிகுதியால் அவ்வாறு பேசினார். இந்த விவகாரம் குறித்து நான் மன்னிப்பு கேட்ட பிறகு த்ரிஷா ஒரு ட்வீட் போடுகிறார். அதில் நானே விரும்பி அந்த போட்டோவை போட சொன்னதாக குறிப்பிட்டு இருந்தார். இப்படி ஒரு ட்வீட் வரும் என்று தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்.
அது ஒரு மூன்றாவது மனுஷியின் ஒரு மூன்றாம் தரமான ட்வீட். சமீப காலமாக அவர் குறித்து வந்த கொச்சையான கருத்துக்கள் பொதுவெளியில் இருக்கிறது. அவை அனைத்துக்கும் அவர் பதில் சொல்லியிருந்தார் என்றால் நான் இதை வரவேற்று இருப்பேன். ஆனால் அது எதற்குமே பதில் சொல்லாமல் எனக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்த காரணத்தால் நான் வருத்தம் தெரிவித்ததே தவறு என நிறைய பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வி ஸ்டாண்ட் வித் பார்த்திபன் என்று நிறைய பேர் குரூப் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த நண்பர்களுக்கு நன்றி” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.