எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? என தவெக நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
சங்கீதா தொடுத்த விவாகரத்து மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அந்த உறவால் தனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் சங்கீதாவை தவெகவின் தொண்டர்கள் இணையங்களில் ஆபாசமாக விமர்சித்து வந்தனர். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் தின விழாவில் பேசிய விஜய், முதல் முறையாக விவாகரத்து விவகாரம் தொடர்பாக மவுனம் கலைத்தார். விஜய் பேசும்போது, “சமீபத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். நீங்கள் போராடி ஹர்ட் ஆக வேண்டாம். நீங்கள் ஹர்ட் ஆவது எனக்கு ஹர்ட் ஆகிறது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இதெல்லாம் வொர்த்தே இல்ல.. நீங்க மக்களுக்காக போராடுங்க. நானும் நீங்களும் சேர்ந்து மக்களின் பிரச்சனைகளை பார்ப்போம், அதில் வருத்தம் எல்லாம் கிடையாது” எனப் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், ரஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று தவெக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதில், விஜய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டுக் காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. “அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது வொர்த்தே இல்ல” என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம்தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?
உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்” என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா? ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன?
“தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே” என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? “திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்” என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா? வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம்.
“பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்” என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம், தலைவா இளைஞர்களை சீர்குலைக்காமல் இருப்பதே சிறந்தது. தமிழக வெற்றிக்கழகத்தில் பயணித்துக்கொண்டே இதை நான் சுட்டிக்காட்டாவிட்டால் அது நம் கழகத்துக்கும், மக்களுக்கும், உங்களை நம்பியிருக்கும் இளைஞர்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்” என ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.