கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது. ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது என நீங்கள் அடுக்கிக்கொண்டே சொல்லும் போது அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதில் என்ன தவறு கண்டுபிடித்தீர்கள் என இந்தியா ஃபஸ்ட் இதழின் ஆசிரியர் இராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இராஜாராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், செங்கல்பட்டில் வைகோ இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் நேரலையில் வைகோ அவர்கள் தெரிவித்த கருத்திற்கு கேள்வி கேட்டதிற்கு நீங்க எந்த பத்திரிகை சார்.. நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. வெளியே போ என தமிழகத்தின் தற்போதைய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் வைகோ அவர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நீங்கள் சொல்லும் கருத்தை கேட்டு ஆமாம் சாமி போடுவதற்கு எங்களின் செய்தியாளர்கள் ஒன்றும் வரவில்லை. நீங்கள் சொல்லும் கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் செய்தியாளர்கள். நீங்கள் மிரட்டியது ஒரு செய்தியாளரை அல்ல ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தை மிரட்டுகின்றீர்கள்.
அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அவற்றின் நிறைகுறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல எங்களின் கடமை. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து, தவறுகளை தைரியமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் எங்கள் கடைமையே. கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது.
ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது என நீங்கள் அடுக்கிக்கொண்டே சொல்லும் போது அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதில் என்ன தவறு கண்டு பிடித்தீர்கள். கேள்வி கேட்பது செய்தியாளர்களின் உரிமை. வைகோ செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு இனிவரும் காலங்களில் செய்தியாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.