கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது.. ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது என வைகோ தெரிவித்தபோது, அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. என மிரட்டிய வைகோ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 9 ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்து வந்தது. இதில் வரிசையாக 12 தேர்தலில் அந்த கூட்டணி வென்ற நிலையில் ஒரே ஒரு தோல்வியால் தற்போது மதிமுக கூட்டணியை மாற்றிக்கொண்டது. சென்னையில் ஜூன் 27, 2026 அன்று நடைபெற்ற மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதோடு தவெக உடன் கூட்டணி வைப்பது பற்றியும் மதிமுக முடிவு எடுக்க உள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டில் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இனிவரும் காலங்களில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மதிமுக தனது முழு ஆதரவை வழங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கமிஷன், கரப்ஷன், ஊழல் என்று திமுக ஆட்சி செய்தது.. ஆட்சி நிர்வாகத்தில் ஊழல் கறைபடிந்து இருந்தது.
ஆனால் இப்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அப்படி இல்லை.. விஜய் அதை எல்லாம் உடைத்துவிட்டார் என வைகோ தெரிவித்தார். இதையடுத்து அப்படிப்பட்ட திமுக கூட்டணியில் நீங்கள் இருந்தது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். நான் கூட்டணியில் இருக்கும் போது எப்படி பேச முடியும்.. வெளியே வந்துதான் பேச முடியும்.. நீங்கள் திட்டமிட்டு கேள்வி கேட்பது போல தெரிகிறது.. நீங்க எந்த பத்திரிகை சார்.. சொல்லுங்கள்.. பதில் சொல்லுங்க..
நீங்க மஞ்ச பத்திரிகையா? உங்க முதலாளி யார்.. கேஸ் போடுவேன்.. வெளியே போ என்று வைகோ கடுமையாக கேள்வி எழுப்பினார். அதோடு கோபமாக வைகோ அப்படியே சீட்டில் இருந்து வெடுக்கென்று எழுந்தார். இதையடுத்து அந்த செய்தியாளரை அப்படியே சுத்துப்போட்ட மதிமுகவினர்.. வைகோவிடம் நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று சரமாரியாக வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.