பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரும் சின்னத்திரை நடிகையுமான அர்ச்சனா ரவிச்சந்திரன், சில நாட்களுக்கு முன்பு, வனத்துறையினரின் அனுமதி இல்லாமல், மலை உச்சி வரை சென்று அதிரடி முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திருவண்ணாமலையில், உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றுப்புறப் பகுதி, பெளர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்ற இடமாக பிரபலமாக உள்ளது. கோவிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உள்ளது. பொதுவாக, பௌர்ணமி நாட்களில் மட்டுமே மலையை சுற்றி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும். மற்ற நாட்களில் வனத்துறையின் முன் அனுமதி இன்றி மலைப்பகுதிக்குள் யாரும் நுழையவோ, ஏறவோ முடியாது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை ஆன்மிக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பஞ்சபூதத் தலங்களில் இது நெருப்பை குறிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமான் இங்கு ஜோதி வடிவாக நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. “அண்ணாமலையைத் தொழுதாலே முக்தி” என்ற நம்பிக்கையுடன் உலகின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இம்மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

அண்ணாமலையார் மலை, சுமார் 14 கிலோ மீட்டர் நீளமுள்ள கிரிவலப் பாதையில், எட்டு திசைகளிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. இந்த லிங்கங்களை வணங்கி செல்வது இங்கு வழிபடும் பக்தர்களின் வழக்கம். பெளர்ணமி நாட்களில் பக்தர்களால் பரபரப்பாக இருக்கும் கிரிவலப்பாதை வழியாக மட்டுமே ஏற முடியும்.
மேலும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலையார் மலையில் ஏற STRICTLY தடை விதிக்கப்பட்டு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மலை உச்சி வரை ஏறும் அனுமதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், அர்ச்சனா ரவிச்சந்திரன், தடை மீறி உச்சி வரை சென்றுள்ளார். அத்துடன், அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மலையேற்றத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், “மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்ததால் மிகுந்த அச்சம் அடைந்ததாகவும்” குறிப்பிட்டிருந்தார். மேலும், “மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள்” என்றும் அவர் தனது பதிவில் அறிவுறுத்தினார். இதில், வனத்துறை தடையை மீறி மலை ஏறியது ஒருபுறம் இருக்க, பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்ற அவரது சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வனத்துறையின் தடையை மீறிய அர்ச்சனாவின் மீது வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.