நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குபொய்கை நல்லூரைச் சோ்ந்த விவசாயி தம்பியப்பன் தனக்கு சொந்தமாக உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாறுதலுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் பட்டா பெயர் மாறுதல் செய்து நீண்ட நாட்கள் கடந்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தால் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனை சென்று பார்த்துள்ளார்.
அப்போது, சபரிநாதன் பட்டா மாறுதலுக்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது. பணத்தை ஏற்பாடு செய்வதாக தெரிவித்துவிட்டு வருவதாக தம்பியப்பன் அங்கிருந்து புறப்படுள்ளார்.இதனையடுத்து, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத தம்பியப்பன் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனுக்கு பாடம் புகட்ட நினைத்து நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத் துறை ரசாயனம் தடவிய ரூ.30,000 ஆயிரத்தை தம்பியப்பனிடம் கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இதையடுத்து நேற்றைய முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பணம் தயாராக இருக்கின்றது என தெரிவித்தபோது புத்தூா் ரவுண்டானா அருகில் வரும்படி கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதன் அவர்கள் தம்பியப்பனிடம் தெரிவித்துள்ளார்.
இத்தனை தொடர்ந்து, புத்தூா் ரவுண்டானா அருகில் கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனிடம் ரசாயனம் தடவிய ரூ.30,000 ஆயிரத்தை பணத்தை தம்பியப்பன் கொடுத்துள்ளார். அப்போது, அங்கே மறைந்திருந்த காவல் கண்காணிப்பாளா் இமயவா்மன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் சபரிநாதனை பிடித்து கைது செய்தனர்.
அதன் பின்னர் சபரிநாதனை தெற்குபொய்கை நல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி அவரை சிறையில் அடைத்தனா். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.