நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த குரூஸ் என்ற இளைஞர் கடந்த 21-ந் தேதி ஊட்டியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நடத்திய விசாரணையில் ஊட்டி நகர போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவரிடம் கஞ்சா வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தான் கஞ்சா விற்பது தொடர்பான விஷயம் காவல்துறையினருக்கு தெரிந்து விட்டதால் காவலர் நசீர் முகமது தலைமறைவானார். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோயம்புத்தூரில் வைத்து கைது செய்து காவல் துறையினர் ஊட்டி அழைத்து வந்தனர். பின்னர் ஊட்டி நகர காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் கேரள மாநிலம் அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டதொரை பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்ற கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஊட்டி நகர மத்திய காவல்துறையினர் அட்டபாடி அருகே உள்ள கோட்டதொரைக்கு விரைந்தனர். அங்கு மோகனசுந்தரத்தை கைது செய்தனர். பின்னர் அவரது இருப்பிடத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் 17 கிரோ கஞ்சா சிக்கியது. கஞ்சா வியாபாரியை உதகை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 21-ந் தேதி நடந்த கஞ்சா விற்பனை தொடர்பான தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு முறையாக தெரிக்காத ஊட்டி நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண் கூடலூருக்கும், ஊட்டி நகர மத்திய காவல் நிலைய தனிபிரிவு காவலர் ஜெயகுமாரை தேவாலா காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா உத்தரவிட்டுள்ளார்.

கஞ்சா விற்றதாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கஞ்சாவை அட்டப்பாடியில் இருந்து எப்படி நீலகிரிக்கு கொண்டு வந்தார், எவ்வளவு காலமாக இவ்வாறு செயல்பட்டிருக்கிறார், கஞ்சா வியாபாரிகளிடம் கொடுத்து விற்பனை செய்துள்ளரா அல்லது தானே விற்பனை செய்தாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கஞ்சா விற்பனையில் மேலும் சில காவலர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினர் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.