கடலூர் அருகே செம்மண் குவாரியில் அதிமுக பிரமுகர்கள் இருவருக்கு இடையே பிரச்னையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்துள்ள குழந்தைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கடலூர் மேற்கு அதிமுக ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி. அவரது மகன் கோபால் கடலூர் கிழக்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.
கிராவல் குவாரி நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபாலுக்கும் அதே பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கொஞ்சிகுப்பம் வினோத்துக்கும் இடையே கிராவல் குவாரி நடத்துவது சம்பந்தமாக இருவருக்கிடையே அடிக்கடி போட்டி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று வினோத் தன் ஆதரவாளர்களுடன் குழந்தைகுப்பம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோரின் குவாரி பகுதியில் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கிருஷ்ணமூர்த்தி மகன் கோபால் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை கையில் எடுத்து மிரட்டி உள்ளார். லைசன்ஸ் பெற்ற கைத்துப்பாக்கி என்ற போதிலும் பொதுவெளியில் எடுத்து அதை பயன்படுத்துவது சட்ட விரோதமானது. இந்நிலையில் அதிமுகவினர் இரு பிரிவுகளாக தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதையும் உடன் இருந்தவர்கள் அலைபேசியில் படம் பிடித்த நிலையில் அந்தக் காட்சிகள் தற்போது வைரலாக வலம் வருகிறது.
இந்நிலையில் வினோத் அளித்த புகாரின் அடிப்படையில், நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் ஜெயக்குமார் செம்மண் குவாரியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய கோபால் என்பவரை உடனடியாக கைது செய்யுமாறு பிறப்பித்த உத்தரவின்பேரில் கோபால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.