சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி மற்றும் அவரது 2 வயது குழந்தை கொல்லப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மற்றொரு பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற அரசு ஆடவர் கலைக் கல்லூரியானது 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் மதரசா பள்ளியாக தொடங்கப்பட்டு 1901-இல் இசுலாமிய மாணவர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டது. இந்த கல்லூரியில் 1948-ஆம் ஆண்டிலிருந்து அனைத்து சமயத்தினரும் கற்கும் விதமாக அரசுக் கல்லூரியாக மாறியது.
இந்நிலையில், 2024-25-ஆம் கல்வியாண்டு முதல் தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் அறிவிப்பின்படி, மகளிரும் இளங்கலைப் பட்டப்படிப்பை கற்றுக் கொள்ளும் பொருட்டு, ஆடவர் கல்லூரியாக செயல்பட்டு வந்த இக்கல்லூரி இருபாலர் கல்லூரியாக பரிணாமம் பெற்று, ‘நந்தனம் அரசு கலைக் கல்லூரி’ என்ற பெயர் செயல்பட்டு வருகின்றது.
சென்னை நந்தனத்தில் அரசு கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் வளாகத்தில் கேண்டீன் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக இந்த கேண்டினை கோட்டூரை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்து செல்வத்தின் கேண்டினில் அரியலூரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் ஒரு மாதத்துக்கு முன் வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால் 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்த கணவரை பிரிந்த நிலையில் அந்த பெண் கேண்டீனில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
அந்த இளம் பெண் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், கேண்டின் உரிமையாளரான முத்து செல்வத்தின் நண்பர் ஒருவர் சிபாரிசு செய்ததின் பேரில் தனக்கு அந்த கேண்டினில் வேலை கிடைத்தது என தெரிவித்துள்ளார். இதனால் வேலைக்கு சேர்ந்த நான் அங்கேயே தங்கி இருந்தேன். மாதம் 10,000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறினார்கள், ஆனால் முதல் மாத சம்பளத்தை கூட நான் வாங்கவில்லை. அதற்குள் எனக்கு நேர்ந்த கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
கேண்டின் உரிமையாளர் முத்துச்செல்வம் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். முதலில் கேண்டினில் வைத்து கொடுமை நடந்தது. அதன் பிறகு இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் வைத்தும், அவர் விருப்பப்படும் நேரத்திலும் என்னிடம் தனது காம இச்சையை தீர்த்துக் கொண்டார். முத்து செல்வத்தை தொடர்ந்து அவரது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவரும் என்னிடம் அடிக்கடி தவறாக நடந்து கொண்டார்.
இதைத் தெரிந்து கொண்ட கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வரும் குணசேகரன் என்பவரும் என்னிடம் தனது ஆசையை தீர்த்துக் கொண்டனர். இதுபோல 3 பேரும் பலமுறை என்னை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தனர். எனக்கு நேர்ந்த இந்த கொடுமைகள் குறித்து கல்லூரியின் காவலாளியிடம் சொல்லி அழுதேன். எனது கண்ணீரை பார்த்த அவர் அளித்த ஆலோசனையின் பேரில் போலீஸ் உதவியை நாடியுள்ளேன் என அந்த புக்கர் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர், கேண்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம், அவரது நண்பர் கார்த்திகேயன் மற்றும் கேண்டினில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வரும் குணசேகரன் ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.
பின்னர் மூன்று பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிப்ரவரி 11-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் சற்று மனநலம் குன்றி காணப்படுவதாகவும், அதனால் வேறு யாரேனும் அவரிடம் அத்துமீறி உள்ளார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தரமணியிலுள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி மற்றும் அவரது 2 வயது குழந்தை கொல்லப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மற்றொரு பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.