தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 மணி நிலவரப்படி தவெக 99 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், திமுக கூட்டணி 61 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. தமிழக தேர்தல் களம் இன்று எதிர்பாராத திருப்பங்களை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராகப் பெரிய அளவில் அதிருப்தி அலை இல்லை என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்பட்ட நிலையில், இப்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் அந்த கணிப்புகளை தலைகீழாக மாற்றியுள்ளன.
இதற்கு முன்பாக MGR கூட கட்சி தொடங்கி இடைத்தேர்தலில் வென்று கூட்டணி அமைத்துதான் 1977-ல் ஆட்சியை பிடித்தார். அதேபோல் திமுக தொடங்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் போராடி தான் ஆட்சியை பிடித்தது. தேமுதிக தொடங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இதன் மூலமாக விஜய்யின் தவெக தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை இடங்களை பெற்றிருப்பது ஜாதிய கணக்குகளை தமிழ்நாட்டில் முறியடித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தவெக எந்தக் கட்சியின் வாக்குகளை அதிகமாக கைப்பற்றும் என்ற விவாதம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தவெக பெரும்பாலும் திமுகவின் வாக்குகளை கைப்பற்றி இருப்பதாக பார்க்கப்படுகிறது. 31 அமைச்சர்களில் மு.க. ஸ்டாலின் உட்பட 23 பேர் பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தவெக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தென் மாவட்டங்களில் அதிமுகவை காலி செய்துள்ள தவெக, திமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே மூத்த அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிடோர் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இதே நிலைதான் தமிழகத்தின் பல முக்கிய தொகுதிகளிலும் நீடிக்கிறது. 4 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் தொடர்ச்சியாகவே முன்னிலையில் உள்ள நிலையில் சுமார் 41 தொகுதிகளில் திமுக 1,500-க்கும் குறைவான வாக்குகளில் 2-வது இடத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த அமைச்சர்கள் போட்டியிட்ட பெரிய தொகுதிகளில் கூட, வெற்றி வாய்ப்பு கடைசி சுற்று வரை ஊசலாடும் நிலையே காணப்படுகிறது.