கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2005-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதன்படி, கிராமப் புறத்தில் வாழும் ஒவ்வொருவருக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இத்திட்டத்தின் கொள்கைளிலும் பல மாற்றங்களை ஆளும் பாஜக அரசு செய்து “மகத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்” என்ற இத் திட்டத்தின் பெயரை ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் என மாற்ற முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கும், அதில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் திட்டக் கொள்கைகளுக்கு எதிராகவும் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் 100-நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்தும், தேசப்பிதா பெயரை சேர்க்க வேண்டும், சம்பள பாக்கியை வழங்க வேண்டும், 200 நாள் வேலை வழங்கவேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி விட்டுக்கட்டியில் ஒன்றியச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஒன்றிய தலைவர் மதியழகன் முன்னிலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு தோழர் ஐ.வி. நாகராஜன், மாவட்டசெயற்குழுதோழர் சி. ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாமிக்கண்ணு, மணிகண்டன், சதிஷ் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.