திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா இன்று கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் P. ராஜாராமன் அவர்கள் தலைமையேற்று மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம் மற்றும் திறன் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு, உயர்கல்வியின் அவசியம், மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்.லோ. சதீஸ்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். ஆங்கிலத் துறைத் தலைவர் R. பாக்கிய லெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, புதிய மாணவர்களுக்கு கல்விப் பயணத்தில் சிறந்து விளங்க வாழ்த்துத் தெரிவித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் திருமதி.S.ஷீலா அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.