பக்கத்து வீட்டுக்காரர்களுடன் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாகவும், வீட்டின் முன்பு தண்ணீர் தெளிப்பது தொடர்பாகவும் பிரச்சினையில் தெருவில் விளையாடிய நாய்க்குட்டிகளை கொடூரமாக தாக்கி கொன்ற பெண் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படி, விலங்குகளைக் கொல்வது அல்லது ஊனப்படுத்துவது போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் (அல்லது இரண்டும்) விதிக்கச் சட்டத்தில் இடம் உண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவில் பிறந்து சில நாட்களே ஆன சில நாய்க்குட்டிகள் ஒரு வீட்டின் முன்பு துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் இருந்து ஒரு பெண் இறங்கி இருக்கிறார். இதைக் கண்ட நாய்க்குட்டிகள் தங்களுக்கு உணவு தரப்போகிறார் என்று ஏக்கத்துடன் வாலாட்டியபடி அருகில் சென்றன.
ஆனால், ஆட்டோவில் இருந்து இறங்கிய பெண் நாய்க்குட்டியை தூக்கி சுவரில் வீசினார். இதில் அந்த நாய்க்குட்டிகள் வீல் என்று சத்தத்துடன் கத்தியது. அதன்பின்னரும் அந்த பெண் கோபத்தின் உச்சிக்கு சென்று தன்னை நோக்கி ஓடி வந்த மற்றொரு நாய்க்குட்டியையும் தூக்கி சுவரின் மீது வீசியிருக்கிறார். இதில் அந்த 2 நாய்க்குட்டிகளும் காத்தியபடியே இருந்தன. அதுமட்டுமின்றி அந்த நாய்க்குட்டிகள் காப்பாற்ற வழியில்லாமல் சிறுது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தன. அதன்பின்னர், அந்த பெண் எதிர்புறத்தில் உள்ள வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றுவிட்டார்.
இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த காட்சியைக் கண்ட விலங்கின ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், திருச்சி பாய்லர் ஆலையில் வேலை செய்து வரும் கம்பரசம்பேட்டை வெள்ளாந்தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் மனைவி மீனாட்சி மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீனாட்சி மிஸ்ராவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீனாட்சி மிஸ்ராவின் எந்த கொடூர செயல் வீடியோ ஆதாரங்கள் வைரலாகியுள்ள நிலையில், ஜாமீன் உடனடியாகக் கிடைப்பது கடினம் என்கிறார்கள். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது அல்லது கொடூரமான முறையில் நடந்துகொள்வது போன்ற காரணங்களால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கத் தயங்கும். எனினும், இது வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.