தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் பயங்கர மோதலில் பட்டாக்கத்தியுடன் வீடு புகுந்து 24 வயது இளைஞர் சஞ்சய் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியத்தில் சஞ்சய் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 தவெக பிரமுகர்கள் உற்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை நொளம்பூர் யூனியன் சாலையில் வசித்து வரும் முருகதாஸ்-செல்வி தம்பதியரின் மகன்கள் சரத், சஞ்சய். இவர்கள் இருவரும் வீட்டின் அருகே தண்ணீர் லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆட்டோவில் வந்த மதுரவாயலைச் சேர்ந்த உதயராஜாவிடம் அவர்கள் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியதில் உதயராஜாவை சஞ்சய் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கோபத்துடன் அங்கிருந்து சென்ற உதயராஜா, தனது சகோதரர்களான ராகேஷ் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பின்னர் பழிவாங்கும் நோக்கில் பட்டாக்கத்திகளுடன் 8 பேர் கொண்ட கும்பல் சரத், சஞ்சய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது வீடு பூட்டியிருந்ததால் வீட்டின் மீது மதுபாட்டில்களை வீசி தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த சரத், சஞ்சய் மற்றும் அவர்களை காப்பாற்ற வந்த தந்தை முருகதாஸ் ஆகிய 3 பேரை 8 பேர் கும்பல் சரமாரியாக பட்டாக்கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சஞ்சய் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சரத் மற்றும் முருகதாஸ் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நொளம்பூர் காவல்துறையினர் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதன்பேரில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த உதய ராஜா, அவரது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா, வீட்டு உரிமையாளர் நவீன்குமார் மற்றும் நண்பர்களான ரூபேஷ், மேசாக், சூர்யா, சூர்யபிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சூர்யா, ராகேஷ், கார்த்திக் ஆகிய 3 பேரும் தவெகவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.