தேனி மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு அப்பா எலெக்ட்ரிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் பாலகுரு, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் சென்னை காவல்துறைக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘என்னுடைய விஷ்ணு அப்பா நிறுவனம் மூலம் திருநெல்வேலி மாவட்டம் தென்னம்பட்டி கிராமத்தில் 200 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க தென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் அனுமதி பெற்று அதற்கான ஆணையையும் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி பெற்றோம்.
அதை கிளின் டெக் சோலார் குரூப், பேர்சன் ரெனியுவபல்ஸ் நிறுவனத்துக்கு 2024-ம் ஆண்டு செப். 26-ந் தேதி மாற்றிக் கொடுத்தோம். ஆனால் நாங்கள் மாற்றிக் கொடுத்ததற்கு எங்கள் நிறுவனத்துக்கு கொள்முதல் ஆணையோ அல்லது அதற்கான கொள்முதல் டெண்டர் தொகையோ அந்த நிறுவனம் வழங்கவில்லை. மேலும் அதே நிறுவனம் எங்களுடைய மற்றொரு நிறுவனமான சந்திரசேகர் சோலார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சூரிய மின் உற்பத்தி பணிகளுக்கும் அதற்கான தொகையை வழங்கவில்லை.
இரண்டு நிறுவனங்களையும் சேர்ந்து ரூ.47.2 கோடியை தராமல், பணத்தை கேட்கும் போதெல்லாம் இந்த நிறுவனம் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் சகோதரர் பிரவீனுக்குச் சொந்தமான நிறுவனம் எனக் கூறி அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எங்களை மிரட்டுகின்றனர்’’ என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.