கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் தாலுகா அலுவலகத்தில் நில சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தாசில்தார் மற்றும் உதவியாளருடன் லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர்.
நாட்டில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே கையூட்டு கொடுக்க வேண்டியநிலை இருக்கும் நிலையில், வருவாய்துறை அலுவலங்களில் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. நிலத்தை அளக்க வரும் சில சர்வேயர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், இடைத்தரர்கள், நிலத்தை அளந்து கொடுத்து பத்திரம் வாங்க கணிசமான பணம் கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன .
ஆனால் வருவாய்துறை உற்பட எந்த ஒரு துறையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் அளிக்க முடியும். ஆதாரத்துடன் புகார் அளித்தால், புகாரை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயணம் தடவிய நோட்டுகளை தருவார்கள். அதன்பின்னர் யார் லஞ்சம் கேட்டாரோ அவரை நேரில் போய் பணத்தை தர வேண்டும்.
அப்படி பணத்தை கொடுக்கும் போது, அதை வாங்கும் அதிகாரிகளாக கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர், தாசில்தார் என யாராக இருந்தாலும் அவர்களை லஞ்ச ஒழிப்புதுறை கையும் களவுமாக பிடிப்பார்கள். அவர்களிடம் லஞ்சப்பணத்துடன் அதிகாரிகள் சிக்கினால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். பின்னர் விரிவான விசாரணைக்கு பிறகு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுவதுடன், அவருக்கு அது பணிக்காலம் முழுவதும் கறையாக தொடரும். இதனிடையே ஜாமினில் வெளியே வரும் அரசு ஊழியர், அந்த வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்படி சிக்கல்கள் இருந்தும் லஞ்சம் வாங்குவதை சில அரசு ஊழியர்கள் தொடருகிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் தாலுகாவில் ஈஷா யோகா மையம், புகழ் பெற்ற பேரூர் கோயில், காருண்யா கல்வி நிறுவனம், வெள்ளியங்கிரி மலை கோயில் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளதால் இங்கு ரியல் எஸ்டேட் துறையில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இதனால் பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம்.

இந்நிலையில், கோயம்புத்தூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அவருக்கு சொந்தமான நிலம், பேரூரில் உள்ளது. இந்த நிலத்துக்கு, நில சொத்து மதிப்பு சான்றிதழ் பெற, பேரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அதற்கு கீழ்நிலை ஊழியர்களால் ஆவணங்கள் அளித்து ஒப்புதல் கொடுத்தும் இறுதி ஒப்புதல் மட்டும் கொடுக்காமல் காத்திருப்பில் வைத்துள்ளனர். இந்த சான்றிதழ் கேட்டு, பழனிச்சாமியின் மேலாளர் ரஞ்சித் குமார், பேரூர் தாசில்தார் ரமேஷ் குமாரை அணுகியுள்ளார்.
இதுதொடர்பாக ரஞ்சித் குமார், தாசில்தாரர் ரமேஷ் குமாரை சென்று சந்தித்துள்ளார். அப்போது ஒப்புதல் கொடுக்க ரூ.50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று ரமேஷ் குமார், ரஞ்சித் குமாரிடம் கூறியுள்ளார். இதனை நில உரிமையாளர் பழனிச்சாமி அவர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி அறிவுரைப்படி, ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனைப்படி, நேற்று ரஞ்சித்குமார், ரசாயனம் தடவிய, 50 ஆயிரம் ரூபாயுடன், பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ரமேஷ் குமாரின் உதவியாளர் சரவணன் என்பவர் லஞ்சப் பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைக்க சொல்லி இருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நுழைந்து ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் பேரூர் தாசில்தாரர் ரமேஷ் குமார் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு சிறுது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.