திருவாரூர் தனியார் கல்லூரியில் காதலன் மிரட்டலுக்கு பயந்து சக தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்த காதலனுக்கு கொடுத்த மாணவியின் செயல் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டம், ஆவூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது இக்பால். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அப்போது தான் கல்லூரியில் அதே துறையில் படிக்கும் தனது ஜூனியர் மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, அவருடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து வைத்து இருந்துள்ளார். அந்த வீடியோவை வைத்து பலமுறை மாணவியை பாலியல் வன்கொடுமை முகம்மது இக்பால் செய்து இருக்கிறார்.

மேலும் தன்னுடன் படிக்கும் தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அனுப்ப சொல்லி மாணவியை வற்புறுத்தியது மட்டுமின்றி இதற்கு மறுத்தால் மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் முகம்மது இக்பால் மிரட்டலுக்கு பயந்த மாணவி தன்னுடன் படிக்கும் தோழிகள் உடை மாற்றும் போது அதனை வீடியோ எடுத்து அனுப்பி விடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில், மாணவி தனது தோழிகளுடன் கல்லூரி இன்டெர்ன்ஷிப் செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பையில் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாணவி சக தோழி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்து கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றொரு தோழி மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரது போனை வாங்கி பார்த்தபோது அவர் ஏற்கனவே இது போன்ற பல வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்துள்ளது. பின்னர் மாணவியிடம் தோழிகள் இதை பற்றி கேட்கும்போது தனக்கு நடந்ததை பற்றியும் முகம்மது இக்பால் மிரட்டியதை பற்றியும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே மணிமங்கலம் காவல்துறை திருவாரூர் விரைந்து முகம்மது இக்பாலை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு அவரது மடிக்கணினி மற்றும் செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்து முகம்மது இக்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.