மதிய உணவு இடைவேளை போது, தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர் ஒருவர் ஏன் இப்படி வருகிறீர்கள் என்று கேட்டு வாங்க தலைமை ஆசிரியரிடம் போகலாம் என கூறியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் அரசு செய்து வருகிறது.இருந்தபோதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சில சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் அரசியல் அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆசிரியர் மதிய உணவுக்கு பிறகு சண்முகசுந்தரம் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேர் மட்டும் தாமதமாக தடுமாறியபடி பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதைப் பார்த்த ஆசிரியர் சண்முகசுந்தரம், ஏன் இவ்வளவு நேரம் எங்கே போனீங்க.. ஏன் இப்படி நடந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நீங்கள் மது குடித்து உள்ளீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு மாணவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதை கவனித்த ஆசிரியர் சண்முகசுந்தரம் தலைமை ஆசிரியரிடம் வாருங்கள் என்று அழைத்துள்ளார்.

அப்போது மாணவர்கள் இரண்டு பேர் ஆசிரியர் என்றும் பாராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் தலைமை ஆசிரியரிடம் வாங்க என்று அழைத்த போது, இரு மாணவர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மதுபாட்டில்களை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, நாடி உள்ளிட்ட இடங்களில் கண்ணாடி பாட்டில் கிழித்து ரத்தம் கொட்டியது.
இதைப் பார்த்ததும் இரு மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள் சண்முகசுந்தரத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் ஆசிரியரை மதுபாட்டிலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.