பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் மாநிலம் முழுக்க நடைப்பயணத்தை நடத்தத் திட்டமிட்டு நேற்று திருப்போரூரில் நடைப்பயணத்தைத் தொடங்கிய நிலையில் அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது எனக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசனப்படி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சமூகநீதி, பெண்களுக்கான உரிமை, விவசாயம், வேலை வாய்ப்பு, நல்லாட்சி, கல்வி உரிமை, உணவு, வளர்ச்சி மற்றும் அடிப்படை சேவைகள் என 10 உரிமைகளை மீட்கும் நோக்கில் பாமக தலைவர் அன்புமணி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அன்புமணி திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார். ‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் நேற்று தொடங்கி நவம்பர் 1-ந் தேதி வரை 100 நாட்கள் நடைபயணம் செல் திட்டமிட்டு இருந்தார்.

இதற்கிடையே அன்புமணி நடைப்பயணத்திற்கு அனுமதி தரக்கூடாது என காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் நகரங்களில் காவல் ஆணையர்கள், மாவட்டங்களில் ஆய்வாளர்கள் தேவையான நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது நடைப்பயணத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அன்புமணி நடைப்பயணம் தொடர்பாக முன்னதாக ராமதாஸ் மனு அளித்து இருந்த நிலையில், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளை காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.