வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே தரைக்காட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஷபீர். இவரது மனைவி ஜபீனா. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2 மாதங்களூக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த மே 20-ந் தேதி ஜபீனாவை ஆம்பூர் அடுத்த நரியம்பட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரஷித் அஹ்மத் அணுகி, ரூ.50 ஆயிரத்தை கொடுத்து பெண் குழந்தையை வாங்கி உள்ளார்.
பின்னர் குழந்தையை வேலூரில் உள்ள புகழேந்தி என்பவருக்கு அதிக விலைக்கு கைமாற்றி உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஷபீர் குழந்தை பற்றி ஜபீனாவிடம் கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஜபீனா மீண்டும் ரஷித் அஹ்மத்வை அணுகி குழந்தையை தந்து விடுமாறும் பணத்தை திருப்பி தருவதாகவும் கூற, ரஷித் அவரை அலைக்கழித்து உள்ளார்.
இதையடுத்து ஜபீனா உம்ராபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். தீவிர விசாரணையை அடுத்து குழந்தையை விற்றதாக ஜபீனா, இடைத்தரகராக வேலை செய்த ரஷித் அஹ்மத் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கட்டிட மேஸ்திரி ரஷித் அஹ்மத், கார் ஓட்டுநரான புகழேந்தியுடன் நட்பில் இருந்தார். புகழேந்தி மூலம் உமா மகேஸ்வரியிடம் குழந்தையை அவர் கொடுத்துள்ளார்.
பின்னர், உமா மகேஸ்வரியின் உறவினரான குளித்தலையை சேர்ந்த அலாவுதீன் மூலமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சதீஷ்குமார், ஹரிணி தம்பதியிடம் பேரம் பேசி ரூ.13 லட்சத்தை வாங்கி குழந்தை குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சென்று குழந்தையை மீட்டனர். இந்த குழந்தை விற்பனைக்கு மூளையாக செயல்பட்ட ஆம்பூர் கார் ஓட்டுநரான புகழேந்தி, ஈரோடு அடுத்த பெருந்துறையை சேர்ந்த யுவராஜ் மனைவி உமா மகேஸ்வரி ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். மேலும் அலாவுதீனை பிடித்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.