பெரிய மனிதர் என நம்பினோம் ஆனால் முதுகில் குத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை T-நகரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், MGR, ஜெயலலிதா காலத்தில் கூட ராஜ்யசபா எம்.பி பதவி தொடர்பான கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை என எடப்பாடி பழனிசாமி சொன்னார்.
அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார். ஆனால், ராஜ்யசபா எம்.பி சீட் தொடர்பான ஒப்பந்தத்தில் தெளிவாகப் பேசிவிட்டுத்தான் கையெழுத்திட்டோம். முன்னாள் முதலமைச்சர் என்ற மாண்பின் காரணமாகத்தான் நாம் அந்த ஆதாரங்களை வெளியிடவில்லை.
அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம். பதவி கொடுப்பார்கள் என நம்பி இருந்தோம். பெரிய மனிதர் என நம்பி நம்பி ஏமாந்தது போதும், இனியும் நாம் நம்பத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.