கேரளாவில் அமைச்சர் ஒருவர் இப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் கள்ள உறவில் இருப்பதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு அந்த அமைச்சர் காதல் இல்லாத நபரே உலகில் இல்லை என்றும் தனக்கு இதுபோல 5000 காதல் உறவுகள் இருப்பதாகச் சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் சீக்கிரமே தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் போலவே கேரளாவில் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் அங்குள்ள ஆளும் இடதுசாரிகள் உள்ளன. ஏற்கனவே, ஆளும் தரப்பு மீது எதிர்ப்பு கணிசமாக இருக்கும் சூழலில், இப்போது கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கேரள காங்கிரஸ் (பி)ன் தலைவரான ஆர். பாலகிருஷ்ண பிள்ளை மகன் கணேஷ் குமார் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மனைவி பிந்து மேனன், கடந்த சனிக்கிழமை தனது கணவரை வீட்டில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்ததாகவும், அப்போது அமைச்சரின் உதவியாளர்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். மேலும், காவல்துறையினரை கூட வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததாகவும் பிந்து மேனன் குற்றம் சாட்டினார்.
கேரள போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமாருக்கும், பிந்து மேனனுக்கும் 2014-ஆம் ஆண்டு ஆன நிலையில், ஆனதிலிருந்து தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் நிலவி வந்ததாக தெரிவித்தார். மேலும், “நான் கடந்த இரண்டு மாதங்களாக வெளியூர் சென்றிருந்தேன். அவர் எனது செல்போன் நம்பரை பிளாக் செய்திருந்தார். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தீர்மானித்து, கொல்லம் அருகில் உள்ள வலக்கத்தில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது படுக்கையறையில் நான் கண்டதை வார்த்தையால் சொல்ல முடியாது. பார்க்கவே கூடாத சிலவற்றை நான் கண்டேன். ஆதாரமாக வைத்திருக்க அதை நான் போட்டோவாக எடுத்தேன். ஆனால் அவரது ஓட்டுநர் என்னை தடுத்தார்.

இதனால் நான் உடனடியாக காவல்துறைக்கு கால் செய்தேன். காவலர்கள் உடனடியாக வந்தபோதிலும், கே.பி. கணேஷ் குமாரின் உதவியாளர்கள் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.. மற்றொருபுறம் அந்த பெண்ணை அவர்கள் வெளியேற்றிவிட்டனர்” என பிந்து மேனன் தெரிவித்தார்.
கணேஷ் குமார் இதுபோல சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை இல்லை. அவரது முதல் மனைவி யாமினி ஏற்கனவே குடும்ப வன்முறை குற்றச்சாட்டை முன்வைத்தே விவாகரத்து பெற்றிருந்தார். அவரை விவாகரத்து செய்த பிறகே, பிந்து மேனனை திருமணம் செய்துள்ளார். தற்போது சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணியில் உள்ள கே.பி. கணேஷ் குமார், பிந்து மேனனின் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியான காங்கிரஸின் தேர்தல் சதி என விமர்சித்தார்.
அப்போது, அமைச்சர் கணேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனக்கு 5,000 காதல் இருப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், “காதல் இல்லாதவர்கள் முட்டாள்கள். மேலும், மூளை இல்லாத பைத்தியக்காரர்கள் கூட காவல்துறையினரை தொடர்பு கொள்ளலாம். எனது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிடக்கூடாது. நான் ஒரு நல்ல மக்கள் பிரதிநிதி மற்றும் எம்எல்ஏ. ஏழைகளுடன் நிற்பவன், ஊழல் மற்றும் மதவாதம் அற்றவன். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். காதலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பின்னர் விளக்குகிறேன்.
மேலும், இந்தியாவில் பெரும் ஆளுமைகளும் கூட காதல் தொடர்பான விஷயங்களுக்காக டார்கெட் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறகு மேலும், “கணேஷ் குமாருக்கு ஒன்று அல்ல, 5,000 காதல்கள் உள்ளன என்பதை நெட்டிசன்கள் புரிந்துகொள்ளட்டும்” என மீண்டும் தெரிவித்தார். இந்த விவகாரத்தைக் கேரளாவில் உள்ள காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.