சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன் மகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்த நிலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளை சேர்த்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4-ந் தேதி முதல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர் சேர்க்கை என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதியான மானாமதுரையில் இளங்கோவன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சொந்த ஊர் திருப்புவனம் அருகே அகரம் கிராமத்தில் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் தேவமித்ரா என்ற மகளுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே தேவமித்ரா அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு முடித்தார். இதனைத் தொடர்ந்து தனது மனைவி, மகளுடன் நேற்று பள்ளிக்கு சென்ற இளங்கோவன் தனது மகளை 6-ஆம் வகுப்புபில் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்துள்ளார். மானாமதுரை தவெக எம்எல்ஏ இளங்கோவன் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.