தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த செல்வம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி எஸ்தர் பாலின், கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகன் சிவஞானம், மகள் அபிசெல்வி. சிவஞானம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அபிசெல்வி +2 படிப்பை பாதியில் கைவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த 9-ந் தேதி இரவு எஸ்தர் பாலினின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து, இளம் பெண்ணின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து கயத்தாறு காவல் நிலையத்திற்கு, அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாய் எஸ்தர் பாலினை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவருடன் அபிசெல்விக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஹரி பிரசாத், பட்டியல் இனத்தை சேர்ந்தவர். அபி செல்வி மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர். எனினும் இருவரும் தீவிரமாக காதலித்துள்ளனர். இந்த விவகாரம் அபிசெல்வியின் சகோதரர் சிவஞானம் மற்றும் தாயார் எஸ்தர் பாலினுக்கு தெரியவே அவர்கள் அபிசெல்வியை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அபிசெல்வி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறு காயங்களுடன் தப்பிய அபிசெல்வி, ஹரி பிரசாத்துடன் மீண்டும் காதலை தொடர்ந்துள்ளார். இதனால் சிவஞானம் மற்றும் அவரது தாய் எஸ்தர் பாலின் ஆகியோர் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கடந்த 9-ந் தேதி மாலை சிவஞானம், அபிசெல்வியிடம் காதலை கைவிடுமாறு கூறவே, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சிவஞானம், அபிசெல்வியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சிவஞானமும், எஸ்தர் பாலினும் சேர்ந்து அபிசெல்வி, தற்கொலை செய்து கொண்டது போல் காட்டுவதற்காக அவரது கழுத்தில் சேலையால் கட்டி, வீட்டில் உள்ள உத்திரத்தில் தூக்குப்போட்டுக் கொண்டது போல் தொங்க விட்டதாக தெரிவித்துள்ளார். இதன் பிறகு தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த இருவரையும் கைது செய்து, கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிவஞானத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், எஸ்தரை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.