தலைமைச் செயலகத்தில் நேற்று தங்களுக்கு மனைப் பட்டா மற்றும் புதிய வீடுகள் கேட்டு வந்த நரிக்குறவர் சமுதாய மக்களின் கோரிக்கையைச் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கேட்டறிந்தார். அப்போது சிறுவனைத் தனது மடியில் அமர வைத்து, தனது கையாலேயே பாசத்தோடு உணவூட்டி நெஞ்சை நெகிழ வைக்கும் மனிதாபிமானச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பொன்னேரி மற்றும் மீஞ்சூர் கிராமப் பகுதிகளில் இருந்து நரிக்குறவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். தங்களுக்குத் தங்குவதற்கு முறையான மனைப் பட்டா வழங்கக் கோரியும், தங்களது குழந்தைகளுக்குப் பாதுகாப்பான புதிய வீடுகள் கட்டித் தரக் கோரியும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசிடம் மனு அளிக்க அவர்கள் வந்திருந்தனர்.

அமைச்சரின் அலுவலக அறைக்குள் நுழைந்த அவர்களை வரவேற்ற அமைச்சர் வன்னியரசு, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவர், அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது அங்குப் பெற்றோருடன் வந்திருந்த நரிக்குறவர் இன சிறுவர்களைக் கண்ட அமைச்சர், உடனடியாக அவர்களைத் தன் அருகில் அழைத்தார்.
அந்தச் சிறுவனைத் தனது மடியில் தூக்கி உட்கார வைத்த வன்னியரசு, அன்போடு அங்கிருந்த ஒரு கிண்ணத்தை எடுத்து, சிறுவனுக்கு உணவு ஊட்டினார். அப்போது சிறுவன், முதலில் அமைச்சர் வன்னியரசுக்கு அதைக் கொடுக்கவே அதை வாங்கி சாப்பிட்டார். மேலும், குழந்தைகளுக்கும் அதை ஊட்டினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.