மத்திய தணிக்கை வாரியம், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் கே.வி.என்.புரோடக்ஷன் தயாரித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை கடந்த 6 மற்றும் 7-ந் தேதி விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நேற்று காலை தீர்ப்பு அளித்தார். அப்போது, ‘ஜனநாயகன்’ படத்தை கடந்த டிசம்பர் 22-ந் தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி, யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர். அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், டிசம்பர் 22-ந் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்க தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஆகவே ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். வழக்கையும் வரும் 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஆவது 10 நாளைக்கு மேல் தள்ளிப் போயிருக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் எல்லாவற்றையும் திரும்பி தர வேண்டிய நிலை தியேட்டர்களுக்கு ஏற்பட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 500 கோடி முதலீடு செய்து எடுத்த படம் தற்போது மேலும் சில நாட்கள் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கலங்கி போயிருக்கிறது.
இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் ஜனநாயகன் படத்திற்காக பலநடிகர், நடிகைகள் ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஏன் நேற்று முதல்வர் ஸ்டாலின் கூட குரல் எழுப்பினார். இந்நிலையில், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி வெளியிட அறிக்கையில், சகோதரர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தமிழர் திருநாளான தை பொங்கல் திருநாள் அன்று தமிழர்கள் பார்க்கவில்லை என்றால். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை தமிழர் முன்னேற்ற ப்படை முற்றுகையிடும் என தெரித்துள்ளார்.