பாஜக MLA நரேந்திர சிங் மாவட்ட ஆட்சியரை, அடிக்க பாய்ந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு, இரண்டு மூட்டை உரங்களை மட்டுமே விநியோகிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விவசாயி, பிந்த் தொகுதி பாஜக MLA நரேந்திர சிங் குஷ்வாஹாவிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதை கேட்டு கோபமடைந்த நரேந்திர சிங், விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவாவின் பங்களாவிற்குச் சென்றார். ஆனால் ஆட்சியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தாவா, அவரை சந்திக்க வெளியே வரவில்லை.

இதில் கோபமடைந்த நரேந்திர சிங், தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வலுக்கட்டாயமாக நுழைந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் வெளியே வந்தார். அதன் பின்னர் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது பாஜக MLA நரேந்திர சிங், மாவட்ட ஆட்சியர் சஞ்சீவை அடிக்க கையை உயர்த்தினார். மேலும் அவர், ‘பிந்த் ஆட்சியர் ஒரு திருடன்’ எனக் கூச்சலிட்டார். அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரை நீகக் வேண்டும் என்று விவசாயிகள் பங்களா முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆட்சியர் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை இந்த இடத்தை வெளியேற மாட்டேன் என்று நரேந்திர சிங் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகார்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பின்னர், நரேந்திர சிங் உள்பட விவசாயிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.