தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மக்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸையும், ஊழியர்களையும் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம குறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேசுகையில்,வண்டியை தாக்கி சேதாரம் செய்து, என்னையும் தாக்கிவிட்டனர். என்னுடன் தொழில்நுட்ப உதவியாளரையும் தாக்கினர்.

இதில் எனக்கு நெஞ்சுவலி, கைவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளேன். எங்கள் தொழில்நுட்ப உதவியாளர் பெண். அவர் அணிந்திருந்த சால், கோர்ட் ஆகியவற்றை பிடித்து இழுத்துள்ளனர். அவர் கர்ப்பமாக உள்ளார். இவர்கள் தாக்கியதில் அவருக்கு கழுத்து, தோள்பட்டை வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காப்பாற்ற சென்ற எங்களுக்கே இந்த நிலைமை என்றால் பொது மக்களுக்கு என்ன நிலை என்று தெரியவில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ‘நான் கடந்த 16 ஆண்டுகளாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைப் பகுதியில் “மக்களை காப்போம்” பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இரவு 9.45 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர், அடுக்கம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சந்திரா என்ற நோயாளியை அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தார்.

அப்போது பழனிசாமி, ஆம்புலன்ஸை பார்த்து, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என மிரட்டினார். இந்த மிரட்டல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தபோது அங்கிருந்த அதிமுகவினர் ஓட்டுநரைத் தாக்கி 108 ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதனால் 108 ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே, 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்கு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்ட அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவருகிறது .