“நாங்கள் யாருக்கும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை” எங்கள் கட்சிக்கு என்று தனி கொள்கை உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் சுமார் 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தாலும் மாநாட்டில் விஜய் பேசிய வார்த்தைகள் இன்னமும் விவாதங்களாக உள்ளது. இந்நிலையில், பாஜகவை போல் அதிமுகவையும் RSS வழி நடத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசி இருந்தார்.

அதுகுறித்து நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் L . முருகன் பதிலளித்தார். அப்போது, “RSS என்பது சமூக சேவைக்கான இயக்கம். நூற்றாண்டு கண்ட இந்த இயக்கம் குறித்து ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் உள்ளிட்டோரும் பேசி உள்ளனர். அவர்கள் RSS சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு உள்ளனர். அரசியல் கட்சிகளை நல்வழிப்படுத்தும் அனைத்து கொள்கைகளையும் RSS இயக்கம் கொண்டு உள்ளது. அப்படிப்பட்ட இயக்கம் அதிமுகவை வழிநடத்தினால் என்ன தவறு? முதலில் விஜய்தான் RSS-இல் சேர்ந்து அரசியல் தெளிவு பெற வேண்டும். RSS கொள்கைகள் மூலம் விஜய் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்” என L . முருகன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளித்தார். அப்போது, “அதிமுக யாருக்கும் அடிமையும் இல்லை, எஜமானரும் இல்லை. எங்களுக்கும் யாரும் அடிமையும் அல்ல, நாங்களும் யாருக்கும் எஜமானரும் அல்ல. எங்கள் கட்சிக்கு என்று தனி கொள்கை உள்ளது. MGR , ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் அதன்படி தான் நடத்தினர்கள். எடப்பாடி பழனிசாமியும் அப்படித்தான் நடக்கிறார். அதிமுக கொள்கையில் இருந்து என்றும் வழுவாது என எல்லோருக்கும் தெரியும்” என செல்லூர் ராஜூ பதிலளித்தார்.