வடமாநிலங்களில் கடந்த ஆண்டுகளில் போலி அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குஜராத்தில் போலி சுங்கசாவடி, போலியாக நீதிமன்றம் என அரசு அலுவலகங்கள் நடத்தி கோடிகணக்கான ரூபாய்களை சுருட்டியதும் அம்பலமானது.
அதே போல உத்தர பிரதேசத்தில் கடந்த மாதம் போலி தூதரகம் நடத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள், வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தி தருவதாக கூறி ஹவாலா பரிமாற்றம் செய்தும் வந்த வந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை காசியாபாத் காவல்துறை கைது செய்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு மோசடி கும்பல் சர்வதேச காவல் நிலையம் மற்றும் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகம் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரசு அதிகாரிகளைப் போல நடித்தும், போலி ஆவணங்கள், போலி அடையாள அட்டைகள் மற்றும் காவல்துறையினரின் சின்னங்களைப் பயன்படுத்தி பணம் பறித்ததும், அரசு ஊழியர்களைப் போல நடித்து www.intlpcrib.in என்ற இணையதளத்தின் மூலம் பணத்தை பெற்று வந்ததும் தெரிய வந்தது.