வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பு மற்றும் வாக்கு திருட்டிற்கு கண்டனம் தெரிவித்து ராகுல்காந்தி, சஞ்சய் ராவத், அகிலேஷ் யாதவ், கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை மறு சீரமைப்பதற்காக எஸ்ஐஆர்(Special intensive revision) என்னும், நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறை படுத்தி 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை பல்வேறு காரணங்கள் சொல்லி இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த அவசர நடவடிக்கைக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.

இதற்கிடையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து, வாக்காளர் பட்டியலில் மோசடிகளை அரங்கேற்றி வருவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ”தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருட திட்டமிட்ட சதி.” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு திருட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி மனு கொடுப்பதற்காக இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.

அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதி வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தினர். இதனால் ராகுல்காந்தி, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். பின்னர், காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.