உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் கோதி குர்த் கிராமத்தைச் சேர்ந்த அர்பி பானோ என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த திங்கள்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதால், அர்பி பானோவின் குடும்பத்தினர் 102 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தனர்.
அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வந்ததும், அர்பி பானோவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால், சாலையில் சேறு சகதி அதிகமாக இருந்ததால், மருத்துவமனைக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாகவே ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
வேறு வழியின்றி, அர்பி பானோவும் அவரது குடும்பத்தினரும் நடந்து செல்லும்போது, அவர் சாலையிலேயே பிரசவித்துள்ளார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கங்வார் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.